நெப்போலியனின் 200-ஆம் ஆண்டு நினைவு நாள்.. புதுச்சேரியில் நினைவு நிகழ்ச்சி

நெப்போலியன் நினைவு நாள்

புதுச்சேரியில் மாவீரன் நெப்போலியனின் 200-வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Share this:
பிரஞ்சு இந்தியாவின் ஜன்னல் என்றழைக்கப்படும் புதுச்சேரி பல வரலாற்றுச் செய்திகளையும் நிகழ்வுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தாலியின் அருகில் உள்ள கோர்சிகா தீவில் 1769 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 - ம் நாள் பிறந்த நெப்போலியன் போனபார்த் பிரான்சின் படைத்தலைவனாக இருந்து பேரரசனாக உயர்ந்தவர். பிரஞ்சு பேரரசரான இவர் பிறந்த காலத்திலும் மறைந்த காலத்திலும் பிரஞ்சு ஆட்சியில்தான் புதுச்சேரி இருந்தது.
இவரது பிறந்த நாளும் இந்திய விடுதலை நாளும் ஒன்றாக வருவதுவும் புதுச்சேரியில் ஏராளமானவர்கள் இவரது பெயரினை வைத்திருப்பதுவும் சிறப்புக்குரிய செய்தியாகும்.

உலகின் ஈடு இணையற்ற அரசனாகப் பேசப்பட்ட இவரின் முகம் மற்றும் வரிகள் பதித்த ஐந்து வகையான அஞ்சல் அட்டைகளை, செய்தித்துறை அரசுச் செயலர் உதயகுமார் வெளியிட தாழி அறக்கட்டளையின் தலைவர் கருணாகரன்   பெற்றுக்கொண்டார்.  மேலும் எனது அஞ்சல் தலை (My Stamp) " பிரிவின் கீழ் இரண்டு வகையான அஞ்சல் தலைகளையும் இவர் வெளியிட தாழி அறக்கட்டளையின் தலைவர் கருணாகரன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக புதுவை முத்தமிழ்ச் சங்க பொறுப்பாளர் மற்றும் ஊடகவியலாளர் பழனிசுவாமி மற்றும் கல்வெட்டாய்வாளர் புலவர் வேங்கடேசன் அகியவர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா பேரிடர் காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடனும் சமுக இடைவெளியுடனும் நெப்போலியன் மறைந்த மாலை 5.49 என்ற சரியான நேரத்தில் மேலும் சில நிகழ்ச்சிகள் நடைப்பெற்று முடிந்தது.

இந்நிகழ்வினை புதுவை அருங்காட்சியக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மனோரஞ்சினி திருநாவுக்கரசு ஏற்பாடு செய்திருந்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: