புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 132-வது பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. அதனை ஒட்டி புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள கவிஞரின் சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர், புதுச்சேரியில் பாரதியார் பாரதிதாசன் இருவருக்கும் முழு மரியாதை செலுத்தப்படுகிறது. புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாரதிதாசன் எழுதியதுதான்.
பாரதிதாசன் பாடும்பொழுது “தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை“ என்று சொன்னார். அதனால் புதுச்சேரியில் எல்லாப் பெயர் பலகைகளும் தமிழில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது பாரதிதாசனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி, மரியாதை, கடமையாக இருக்கும். அரசு கட்டாயப்படுத்துவதை விட நாமாக முன்வந்து தமிழ்ப் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும்.
Also Read : எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணி : 27 லட்ச ரூபாய் வரை சம்பளம்
புதுச்சேரியில் எல்லா இடங்களிலும் வணிக நிறுவனங்களிலும் தமிழ்ப் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்ற குறிப்பை தருவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். வீட்டில் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரை வைத்துப் பழகுவோம். தமிழை பாராட்டுவோம் சீராட்டுவோம்.
புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தரப்படுகிறது. தமிழ் தாய் வாழ்த்து இல்லாமல் எந்த அரசு நிகழ்ச்சியும் தொடங்கப்படுவது இல்லை என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.