புதுச்சேரியில் ரூ.3,000-க்கு வாங்கி கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 5 சிறுமிகள் மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்ததாக 8 பேர் கைது

Youtube Video

புதுச்சேரியில் ஐந்து சிறுமிகள் கூட்டுபாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமிகள் கொத்தடிமைகளாக வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

  • Share this:
    புதுச்சேரி மங்கலம் பகுதியில் வாத்து பண்ணை ஒன்றில் மீட்கப்பட்ட ஐந்து சிறுமிகள் வந்தவாசியில் இருந்து கொத்தடிமைகளாக வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளநிலையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுவன் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வாத்து பண்ணை இயங்கிவந்துள்ளது. இதில் சிறுவர்கள் பணியமர்த்தப்படுவதாக தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்புகார் எழுப்பிவந்தது. மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி அதிகாரிகள் பண்ணையில் நடத்திய சோதனையில் ஐந்து சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

    ஐந்து சிறுமிகளுக்கும் ஆண்களைப் போல தோற்றம் ஏற்படுத்த பேன்ட் சட்டை போடவைத்து பணியாற்றவைத்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் மீட்கப்பட்ட சிறுமிகள் ஐந்து பேரும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. புதுச்சேரி மருத்துவமனையில் சிறுமிகளுக்கு நடத்திய சோதனையில் ஒருவர் கருவுற்று இருந்ததும் மற்ற சிறுமிகளும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து பண்ணை உரிமையாளர் கண்ணியப்பன் உள்ளிட்ட பணியாளர்கள் என ஆறுபேரை கைது செய்தனர். சிறுமிகள் விவகாரம் விஷ்வரூபம் எடுக்க தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.

    தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் கடந்த வியாழன் அன்று நேரில் வந்து விசாரணை நடத்தினார். வில்லியனூர் துணை ஆட்சியர் அஸ்வின் சந்துரு, தாசில்தார், காவல் கண்காணிப்பாளர் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

    வாத்துப்பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது வீட்டில் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.  பண்ணையில் வேலைக்கு வைப்பதற்காக சிறுமிகள் தமிழகத்தின் வந்தவாசியில் இருந்து மூன்றாயிரத்திற்கு விலைக்கு வாங்கப்பட்டது தெரியவந்தது.

    மேலும் கண்ணியப்பன் அவர்களை கொத்தடிமைகளாக பணியில் வைத்ததும் தெரியவந்தது. செய்தியாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த், ‘குழந்தைகள் நல்லமுறையில் உள்ளதாகவும் தொடர்ந்து அவர்களுக்கு மனரீதியாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    சிறுமிகள் தொடர்பான விசாரணை அறிக்கை டெல்லியில் குழந்தைகள் நல ஆணையத் தலைவரிடம் சமர்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில் சிறுமிகள் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பனின் இளைய மகன் 22 வயது சரத்குமார் மற்றும் 15 வயது சிறுவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணையும் தொடர்ந்து வருகிறது.
    Published by:Karthick S
    First published: