கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் நாளை முதல் வரும் 27ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி பல்கலைக்கழகம் இன்று விடுத்துள்ள அறிவிப்பில், "எதிர்பாராத வகையில் கொரோனா தொற்று பரவல் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அதிகரித்துள்ளது. அதனால் நாளை (ஏப். 23) முதல் வரும் 27ம் தேதி வரை பல்கலைக்கழக வளாகம் மூடப்படுகிறது. அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு இந்த மூடல் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் விடுதிகளும் மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு உத்தரவில், "கொரோனா பரவலால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விடுதிகளில் தங்கியுள்ள பிஎச்டி ஆராய்ச்சியாளர்கள், மாணவ, மாணவிகள் வரும் 25ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும். விடுதிகள் திறக்கும் தேதி பல்கலைக்கழக இணையத்தில் வெளியிடப்படும்.
விடுதிகளில் இருந்து புறப்படும்போது தங்கள் அறையில் வைத்துள்ள விலை மதிப்புள்ள சாதனங்கள், லேப்டாப், மொபைல், கல்வி சான்றுகள் ஆகியவற்றை பத்திரமாக கையோடு எடுத்து செல்வது அவசியம். விடுதிகளில் இருந்து மாணவ, மாணவியரின் பெற்றோருக்கும், உள்ளூர் பாதுகாவலருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.
அத்துடன் உணவு விடுதி வரும் 26ம் தேதி முதல் மூடப்படும். அதேபோல் விடுதியில் தங்காத இதர பிஎச்டி ஆராய்ச்சியாளர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்கள் ஆகியோரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வர அனுமதி இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உங்கள் நகரத்திலிருந்து(Puducherry)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.