கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறை கூறாதீர்கள்.. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லுங்கள்.. தமிழிசை காட்டம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறை கூறாதீர்கள். அதற்குப்பதிலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லுங்கள் என துணைநிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
உலகம் முழுவதும் செவிலியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில் செவிலியர்கள் கொரோனா போராளிகளாக அறிவிக்கப்பட்டு கோரிமேட்டில் உள்ள அன்னை தெரசா மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் செவிலியர் விழா நடந்தது. விழாவுக்கு சுகாதாரத்துறை செயலர் அருண் தலைமை வகித்தார். இயக்குனர் மோகன்குமார் வரவேற்றார். துணைநிலை ஆளுநர் தமிழிசை செவிலியர்களுக்கு தலையில் கிரீடம் சூட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், ”கொரோனா போரில் முன்னெடுத்து செல்லும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் கவர்னர் மட்டுமல்ல, டாக்டரும்தான். செவிலியர் பணியை மிக உயர்வாக கருதுகிறேன். நான் மருத்துவ மாணவியாக இருந்தபோது ஊசி போடுவதுக்கு கூட செவிலியரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். நான் பல இடங்களில் இதனை பேசியுள்ளேன். வரும்கால மருத்துவ உலகம் எப்படியிருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு செவிலியர்கள் செயல்பட வேண்டும். ஈடுபாட்டுடன் பணியை செய்யும் செவிலியர்கள் தங்கள் உடல்நலத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும்” என்றார்.

கொரோனா போரில் முன்னெடுத்து செல்லும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த தமிழிசை செளந்திரராஜன்


மேலும் பேசியவர், "ஒரு சில செவிலியர்கள் உடல்நிலை பாதிக்கப்படுவதை கேள்விப்படும்போது வருத்தமடைகிறேன். உங்கள் உடல்நலத்தையும் கவனியுங்கள். நான் மருத்துவராக இரவு நேர பணியில் இருக்கும்போது என்னோடு அதிகநேரம் செவிலியர்கள்தான் இருந்தனர். அவர்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுள்ளேன். செவிலியர்களின் கொரோனா பணி மிகவும் பாராட்டுக்குரியது. டாக்டர்கள் குறிப்புகளைத்தான் எழுதி தருவார்கள். நோயாளிகளுக்கு மருந்து அளித்து சீராட்டி, பாராட்டி கவனிப்பது செவிலியர்கள்தான். இதனால்தான் விவேகானந்தர் செவிலியர்கள்போல வாழ வேண்டும் என கூறியுள்ளார்” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், “கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், தடுப்பூசி போடுவதும் முக்கியத்துவமானது. மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம். முகக்கவசம் அணியாமல், தனி மனித கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் கொரோனா போரில் வெற்றி பெற முடியாது. இந்த கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்” என்று கூறினார்.

பின்னர், “ 24 மணி நேரமும் அரசும், சுகாதாரத்துறையும் கொரோனாவை தடுக்க இயங்கி வருகிறது. ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது கவலையளிக்கிறது. இதனால் குறைகளை கூறாதீர்கள். அதற்குப்பதிலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லுங்கள். மத்திய அரசு ஜிப்மருக்கு 70 ஆக்சிஜன் ஜெனரேட்டர் வழங்கியது. மாநில அரசுக்கு தற்போது 40 ஆக்சிஜன் ஜெனரேட்டர் வழங்கியுள்ளது. பிரதமர் நல நிதியிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை உருவாக்கியுள்ளோம். கொரோனா தடுப்புக்கான கட்டமைப்பு பணிகளை முழுமையாக செய்துள்ளோம். இதனால் 3வது, 4வது அலை வந்தாலும் கொரோனாவை தாங்கிக்கொள்ளும் வகையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளோம்” என்று கூறினார்.

மேலும் படிக்க... இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலைக்குரியது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தொடர்ந்து கவர்னர் தமிழிசை அங்கிருந்த செவிலியர்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா? என விசாரித்தார். தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: