ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதுச்சேரி ஆட்சி கவிழ்ப்பு : ஜனநாயக படுகொலை - மு.க.ஸ்டாலின் சாடல்

புதுச்சேரி ஆட்சி கவிழ்ப்பு : ஜனநாயக படுகொலை - மு.க.ஸ்டாலின் சாடல்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாயகத்தைப் பட்டப் பகலில் பச்சைப் படுகொலை செய்யும் படுபாதகச் செயலையே இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு, மீண்டும் அதனைப் புதுச்சேரியில் அரங்கேற்றியிருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  புதுச்சேரியில் பெரும்பான்மையை இழந்ததை அடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனைச் சந்தித்து தனது மற்றும் அமைச்சரவையின் பதவி விலகல் கடித்ததை நாராயண சாமி வழங்கினார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதல்வர் நாராயணசாமி இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனைச் சந்தித்து தனது மற்றும் அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தை சமர்பித்தார். அவருடன் அவரது அமைச்சரவை சகாக்கள், மக்களவை உறுப்பினர் மற்றும் ஆளும் கூட்டணி அரசின் சட்டடமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாயகத்தைப் பட்டப் பகலில் பச்சைப் படுகொலை செய்யும் படுபாதகச் செயலையே இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு, மீண்டும் அதனைப் புதுச்சேரியில் அரங்கேற்றியிருக்கிறது. துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடியைக் கொண்டு, புதுவை யூனியன் பிரதேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசின் உரிமைகளைப் பறித்ததுடன், மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து முதலமைச்சர் திரு. நாராயணசாமி அவர்களும் கூட்டணியினரும் ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடி வந்தன.

  துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களை மாற்ற வேண்டும் என நீண்டகாலமாகக் கோரிக்கை வைக்கப்பட்டு - போராட்டங்கள் நடத்தப்பட்டபோது அலட்சியமாக இருந்து, புதுச்சேரி மக்களை வஞ்சித்த மத்திய பா.ஜ.க. அரசு, சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிற மாநிலங்களில் செய்தது போலவே எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் குதிரை பேரம் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்ததுடன், துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களை மாற்றிவிட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராசன் அவர்களைத் துணை நிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பாக நியமித்த போதே இதன் உள்நோக்கத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.

  மிகவும் மோசமான - அரசியல் நாகரிகமற்ற அந்த உள்நோக்கத்தின் அடிப்படையில், குதிரை பேரம் நடத்தியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் - தாங்களாகவே நியமித்துக்கொண்ட உறுப்பினர்களுக்குப் பேரவையில் வாக்குரிமை உண்டு எனச் சொல்லியும், புதுச்சேரியில் மக்கள் நலன் காத்த முதலமைச்சர் திரு. நாராயணசாமி தலைமையிலான அரசைக் கவிழ்த்திருக்கிறது பா.ஜ.க. பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளையும் - சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் திரு. நாராயணசாமி அவர்கள். ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலான செயல்பாட்டை வாழ்த்துகிறேன்.

  தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரியும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில் ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாவிட்டாலும், அடிமை அ.தி.மு.க.வை கைப்பாவையாக்கி ஆட்சி நடத்துவதுபோல, புதுச்சேரியில் தேர்தலைத் தள்ளிவைத்து, துணை நிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட முயற்சித்தால் அதனை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தி.மு.கழகம் துணை நிற்கும். அதிகார துஷ்பிரோயகம் செய்து சட்டமன்றங்களில் சடுகுடு ஆடலாம். மக்கள் மன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. அதனால், இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்!” என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Ram Sankar
  First published:

  Tags: BJP, DMK, Puduchery