அரசு விழாவில் தியாகிகளை பற்றி பேசுகையில் மேடையில் உணர்ச்சிவசத்துடன் கண்ணில் கண்ணீர் ததும்ப துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.
மத்திய கலாச்சாரத்துறை, புதுச்சேரி கலைப் பண்பாட்டுத்துறை மற்றும் செய்தி, விளம்பரத்துறை சார்பில் புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரம கலையரங்கத்தில் இன்று தியாகிகள் தினம் நடைபெற்றது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் போன்றோரின் தியாகத்தை விளக்கிய போது துணைநிலை ஆளுநர் தமிழிசை நா தழு தழுக்க கண்ணில் கண்ணீர் ததும்ப தமிழிசை பேசினார். நிகழ்ச்சியில் பேசும்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்.
பல இளைஞர்களின் தியாகத்தால் தான் விடுதலை கிடைத்துள்ளது. ஒவ்வொரு சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றி தேடித் தேடி படிக்க மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். வாஞ்சிநாதன் துப்பாக்கி சுட பயிற்சி பெற்றது புதுச்சேரி மண்ணில்தான். இப்படிப்பட்ட பல தகவல்கள் பலருக்கு தெரியவில்லை. இதை தேடித் தேடிப் படிக்க வேண்டும். புரட்சி என்பது துப்பாக்கி எடுப்பது மட்டுமல்ல நாம் நினைப்பதை தீவிரமாக இருந்து உறுதியாக இருந்து சாதிப்பது தான்.
தூக்கு மேடைக்கு செல்லும் பொழுது கூட பகத்சிங் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். தியாகிகளின் வரலாற்றை தேடி தேடி படியுங்கள் என மாணவர்களுக்கு தமிழிசை அறிவுரை வழங்கினார். மேலும் அவர் பேசுகையில், இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகள் பற்றி இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லும் தினமாக இந்த தியாகிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ஆம் தேதி கட்டாயமாக கொண்டாடப்படவேண்டும் என்று பாரதப் பிரதமர் எடுத்துக் கூறினார்.
அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது அவருக்கு வயது 23. மூன்று இளைஞர்கள் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்ட நாள். எங்களுடைய உயிர் ஒரு மெழுகுவர்த்தி போல இங்கு கரைந்தாலும் எங்களது தியாகத்தின் வெளிச்சம் இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கித் தரும் என்று சொல்லிவிட்டு தூக்குமேடை ஏறினார்கள்.
பகத் சிங் தூக்கு மேடைக்கு போவதற்கு முன்னால் கூட புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட இளைஞர்கள் வாழ்ந்த நாடு இந்த நாடு. தூக்கு மேடைக்கு யார் முதலில் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது நான் செல்கிறேன் என்று சுகதேவ் சொன்னார். இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தருவதற்காக தூக்கு மேடையை எந்த அளவிற்கு விருப்பமாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காந்தியக் கொள்கை அகிம்சைக் கொள்கை. இவர்கள் தேர்ந்தெடுத்தது தீவிரவாதக் கொள்கை. தீவிரவாதம், புரட்சி என்பதை கத்தி, வெடிகுண்டு பயன்படுத்துவது என்று புரிந்து கொள்ள வேண்டாம். தாம் நினைப்பதில் தீவிரமாக இருந்து அதன்மூலம் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவோம் என்று உறுதியாக இருப்பதுதான் புரட்சி. அந்தப் புரட்சியாளர்களுக்காகத்தான் இந்த திருநாள். சுபாஸ் சந்திரபோஸ் இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கி தர வேண்டும் என்பதற்கு ஜப்பான், சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து இளைஞர்களை கூட்டி வந்தார்.
நாட்டின் எல்லை வந்தவுடன் இந்த நாட்டின் எல்லையைத் கடக்கும் முதல் 10 பேர் இந்தியர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் என் நாட்டில் கீழே விழும் முதல் ரத்தம் இந்தியனின் ரத்தமாக இருக்க வேண்டும் என்றார். அப்படி ரத்தம் சிந்தி வாங்கிய சுதந்திரம் இந்த சுதந்திரம் என கண் கலங்கி தமிழிசை பேசினார். இதனை வரவேற்று மாணவர்கள் கைத்தட்டி வரவேற்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.