புதுச்சேரியில் நடைபெறும் இளைஞர் தின விழாவை துவக்கி வைக்க பாரதப் பிரதமர் மோடி வரும் 12-ம் தேதி வருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் தொடங் கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் நேற்று இம்முகாம் துவங்கிய நிலையில் இரண்டாவது நாளாக வைசியாள் வீதியில் உள்ள சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு தடுப்பூசி முகாமினை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் 12-ம் தேதி தேசிய இளைஞர் தின விழா நடக்கிறது. இதில் 7500 இளைஞர்கள் நாடு முழுவதும் வருகிறார்கள். இதில் பிரதமர் பங்கேற்று இளைஞர்கள் மத்தியில் பேசுகிறார். அரவிந்தர் ஆசிரமத்தில் பிரதமர் வழிபடுகிறார். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் பங்கேற்பது புதுச்சேரிக்கு பெருமை என்றார்.
மோடி வருவதற்கான முன்னேற்பாடுகளை நாளை மத்திய பல்கலைக்கழகத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆய்வு செய்கிறார் எனவும் கருவடிக்குப்பத்தில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை பிரதமர் காணொலியில் திறக்க வாய்ப்புள்ளது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் இன்னும் 1 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றும் புதுச்சேரியில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு இதுவரை 454 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் குழந்தைகள் தைரியமாக தடுப்பூசி போட்டு கொள்வதால் ஊசி போடாத பெரியவர்கள் திருந்த வேண்டும் என்றும்தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகளை கூடுதலாக விதிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளேன் என்று தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், இன்னும் சில கட்டுப்பாடுகள் வரும் என்றார். ஊரங்கு போட்டு நாம் அடங்குவதை விட நோயை நாம் அடக்க வேண்டும். இனி கொரோனாவோடு தான் வாழ வேண்டும். சுகாதார முன் எச்சரிக்கையோடு இனி இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.