மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 24 ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தருகின்றார் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார தினத்தை ஒட்டி, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் புதுச்சேரி கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் நடைப்பயிற்சி நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
ஆளுநர் மாளிகைக்கு எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்தனர். அப்போது பேசிய துணைநிலை ஆளுநர், உடல் நலத்தையும் மன நலத்தையும் பேண வேண்டியது மிகவும் அவசியம்.
உடல்நலம் என்ற அடிப்படையின் மேல் தான் சாதனை என்கிற கட்டிடத்தை எழுப்ப முடியும். அதனால் அனைவரும் காலை எழுந்தவுடன் உடல் நலத்தை பேணுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் யோகா செய்ய வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
உலக சுகாதார தினத்திலிருந்து தொடர்ந்து 75 நாட்கள் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்பதற்காக பிரதமர் அதனை தொடங்கி வைத்தார் என்றும் கூறினார்.
யோகா என்பது உடல் நலத்தை போலவே மன நலத்தை பாதுகாப்பதாகவும் அமைகிறது. உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும், மனம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். உடல் நலத்தைப் பேணுவது என்பது உணவு முறையையும் உள்ளடக்கியது. அனைவரும் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். உடல் பயிற்சியை போலவே உணவு பயிற்சியும் முக்கியம் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.
சிறுதானியங்களில் அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களும் இருக்கின்றன. அதனால் மத்திய அரசு சிறுதானிய ஆண்டு என்று கொண்டாடத் திட்டமிட்டு இருக்கிறது. விஞ்ஞானபூர்வமாக உடல் நலத்தை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறிய அவர், உடல் நலமும் மன நலமும் சீராக இருந்தால் நாம் செயல்படுவதற்கான சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.
மக்களுக்கு உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி பாராட்டுதற்குரியது என்றும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 24ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தருகின்றார் என்றார். பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தது மகிழ்ச்சி. இருவரும் புதுச்சேரி மீது அக்கறை, ஆர்வம் கொண்டுள்ளார்.
பிரதமர், உள்துறை அமைச்சர் புதுச்சேரிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவர அவர்கள் உறுதுணையாக இருக்கின்றார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 24ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தருகின்றார் என்றார்.
முக கவசம் தொடர்ந்து அணிய வேண்டுமா..? என கேள்விக்கு முககவசம் அவர்களோடு கட்டுப்பாடு. முகக்கவசம் என்பது அவர்களது விருப்பம். திரிபுரா அடுத்து புதுச்சேரி கொரோனா இல்லாத மாநிலமாக உள்ளது. புதுச்சேரி கொரோனா இல்லாத மாநிலமாக இருந்தாலும் தனி மனித இடைவெளி, கை தூய்மை, முக கவசம் அணிவது என்பது அவரவர் விருப்பம் , சிறிது காலம் இது தொடரவேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.