புதுவை அரசு நிகழ்ச்சியில் சமூக இடைவெளி இல்லை - முதல்வர் புகைப்படத்தைச் சுட்டிகாட்டி கிரண்பேடி குற்றச்சாட்டு

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுவை அரசு நிகழ்ச்சியில் சமூக இடைவெளி இல்லை என முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்ட நிகழ்ச்சியின் புகைப்படத்தைச் சுட்டிகாட்டி கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.

  • Share this:
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திலுள்ள கமிட்டி அறையில் சட்டத்தொகுப்பு புத்தகம் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் நடந்தது. இந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி, அரசு செயலர் அன்பரசு உட்பட பலர் பங்கேற்றனர். இப்புகைப்படத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டு, இது சமூக இடைவெளியை மீறுவதாகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கூறுகையில், விஐபிக்கள் சமூக தளத்தில் இயங்குவதைத் தெளிவுப்படுத்துகிறது. முன்மாதிரியாக சமூகத்துக்கு விஐபிக்கள் திகழ வேண்டும். நான் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். சமூக இடைவெளி உட்பட முக்கிய விஷயங்களைக் கடைபிடியுங்கள். அதை மீறும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம். இப்புகைப்படம் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காததற்கு சான்று. புதுச்சேரியில் கொரோனா அதிகரிப்பதற்கு இதுவே முக்கியக்காரணம் என்றார்.

புத்தகம் வெளியீட்டு நிகழ்வு.


விஐபிக்கள் மற்றும் பிறரின் இதுபோன்ற விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்று தெரிவித்த அவர், சமூகத்துக்கு முன்னோடியாக தலைமையில் இருப்போர் முதலில் விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். மக்களால் தேர்வான பிரதிநிதிகளே தினசரி இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவதால் மருத்துவர்களும், சட்டத்தை அமலாக்கம் செய்வோரும் ஏமாற்றமடைந்துள்ளனர். மக்கள் செய்யவேண்டியதை அரசியல் தலைமைச் செய்யாவிட்டால், கொரோனாவுக்கு எதிரான யுத்தம் பின்னோக்கித்தான் செல்லும் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் தங்கள் பகுதிகளுக்குப் பொறுப்பேற்று தனிப்பட்ட ஒழுக்கத்தைக் கவனிக்கவேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்று கூறியுள்ள கிரண்பேடி, விரைவில் விநாயக சதுர்த்தி விழா வரவுள்ளது. அரசியல் தலைமையில் உள்ளோர் தங்கள் பாணியை மாற்றிக்கொள்வதும் அவசியம். இல்லாவிட்டால் பாதிப்பு அதிகரிக்கும். உண்மையில் புதுச்சேரியை நேசித்தால், மக்கள் நலனில் உண்மையில் அக்கறையிருந்தால் ஒவ்வொரு அரசியல் பிரதிநிதியும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கையைத் தூய்மை செய்தல், இடத்தைத் தூய்மையாகப் பராமரித்தல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.
Published by:Rizwan
First published: