காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொன்று சுடுகாட்டில் வீசிய இளைஞர்.. புதுவையில் பயங்கரம்..

Youtube Video

காதலிக்க மறுத்ததால், காதலியைக் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசிய இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது. 

 • Share this:
  புதுச்சேரி பொறையூர்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம் செவ்வாய்க்கிழமை மாலையில் 19 வயதான இளைஞர் பிரதீஷ் சென்றுள்ளார். தான் ஒரு கொலை செய்து விட்டதாகவும் தனக்கு முன்ஜாமின் வாங்கித் தரும்படியும் கோரியுள்ளார். அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர், இளைஞரை சமாதானப்படுத்தி விட்டு உடனடியாக வில்லியனூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார். வில்லியனூர் போலீசார் அந்த இளைஞரிடம் விசாரித்தபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

  புதுச்சேரி சந்தைக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரது மகள் 17 வயதான ராஜஸ்ரீ.ராமன் வெளிநாட்டில் பணிபுரிகிறார். ராஜஸ்ரீ 10ம் வகுப்பு படித்தபோது தினசரி பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். பேருந்து பொறையூர்பேட்டை வழியாக செல்லும்போது அதில், பிரதீஷும் பயணித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

  பிரதீஷ், 10ம் வகுப்பு முடித்து விட்டு, சிறிய வகை வேலைகள் பார்த்து வந்துள்ளார். அவர் மீது 2 அடிதடி வழக்குகள் உள்ளன. இதற்கிடையே பள்ளிப் படிப்பை முடித்த ராஜஸ்ரீ, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது அவருக்கு பிரதீஷின் நடவடிக்கைகள் தெரியவந்து விலக ஆரம்பித்துள்ளார்.

  சமீபத்தில் பிரதீஷ் விபத்துக்குள்ளாகி வீட்டில் இருந்தபோது ராஜஸ்ரீ  2 முறை பார்க்க வந்துள்ளார். அதன் பிறகு வரவில்லை. ஏன் வரவில்லை என்று பிரதீஷ் கேட்டபோது, அவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் தான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ஆத்திரமடைந்த பிரதீஷ், கடைசியாக ஒரு முறை சந்திக்கலாம் என்று கூறி அழைத்துள்ளார்.

  அதன்படி, ராஜஸ்ரீ, செவ்வாய்க்கிழமை காலையில் கல்லூரிக்கு செல்வதாகக் கூறி விட்டு, பொறையூர்பேட்டைக்கு பேருந்தில் சென்று இறங்கியுள்ளார். அங்கு பைக்கில் காத்திருந்த பிரதீஷ், அவரை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு காதல், திருமணம் பற்றி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை ஆகியுள்ளது.

  மேலும் படிக்க...  கோவையில் கட்டு கட்டாக சிக்கிய ரூ1.80 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்... 2 பேர் கைது

  அந்த நேரத்தில் பிரதீஷின் உடன் பிறந்த சகோதரர் 17 வயதான சிறுவன் அங்கு சென்றுள்ளார். ஆத்திரத்தில் இருவரும் சேர்ந்து ராஜஸ்ரீயின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கு கிடந்த சிமெண்ட் பையில் சடலத்தை திணித்து வீசி விட்டு வீடு திரும்பியுள்ளனர்.  எனினும் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என நினைத்த பிரதீஷ், வழக்கறிஞரிடம் சென்றபோதுதான் கொலையே அம்பலமானது என போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரதீஷ் சுட்டிக் காட்டிய இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு சிமெண்ட் பையில் ராஜஸ்ரீயின் சடலம் திணிக்கப்பட்டிருந்துது தெரியவந்தது.

  சடலத்தை மீட்ட காட்டேரிக்குப்பம் போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரதீஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான அவரது சகோதரரை போலீசார் தேடி வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: