அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலை ஆளுநரிடம் அளித்தார் முதல்வர் ரங்கசாமி!

அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலை ஆளுநரிடம் அளித்தார் முதல்வர் ரங்கசாமி!

இன்று காலை 10.15 மணியளவில் முதலமைச்சர் ரங்கசாமி ஆளுநர் மாளிகைக்கு வந்து துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்தார். 20 நிமிட சந்திப்புக்கு பிறகு ரங்கசாமி 10.35 மணிக்கு திரும்பினார்.

  • Share this:
நீண்ட இழுபறிக்கு பின் புதுச்சேரியில் அமைச்சர்களுக்கான  இலாகா பட்டியலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் முதல்வர் அளித்தார்.

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அமைச்சர்கள் பங்கீட்டில் இழுபறி, பாஜக பரிந்துரை செய்த அமைச்சர் பட்டியலில் மாற்றம், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் தேர்வில் தாமதம் ஆகியவற்றால் அமைச்சரவை பதவியேற்பில் இழுபறி ஏற்பட்டது.

இதனால் ரங்கசாமி முதல் அமைச்சராக பதவியேற்று 50 நாட்களாகியும் அமைச்சரவை பதவி ஏற்காமல் இருந்தது. இறுதியில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு என்ஆர்.காங்கிரசில் லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பாஜகவில் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். பாஜக தரப்பில் நமச்சிவாயத்துக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கேட்கப்பட்டது. ஆனால், ரங்கசாமி மறுக்கவே முக்கிய துறைகளை பாஜக தரப்பு கேட்டது. குறிப்பாக உள்துறையை தரக்கோரியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் பாஜக அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கீட்டிலும் இழுபறி நீடித்தது. இதனால், அமைச்சர்களுக்கு வேலை தரக்கோரி நூதன போராட்டங்களை எதிர்கட்சியினர் நடத்தினர். வேலையில்லாத அமைச்சர்கள் என காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் குற்றஞ்சாட்டினார். இருப்பினும் தொடர்ந்து அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கிய காரில் வலம் வந்தனர். சட்டப்பேரவையில் தங்கள் அறைகளுக்கும் வந்து சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 10.15 மணியளவில் முதலமைச்சர் ரங்கசாமி ஆளுநர் மாளிகைக்கு வந்து துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்தார். 20 நிமிட சந்திப்புக்கு பிறகு ரங்கசாமி 10.35 மணிக்கு திரும்பினார்.

இந்த சந்திப்பின் போது முதல் அமைச்சர் ரங்கசாமி தமிழிசையிடம் அமைச்சர்களின் இலாகா பட்டியலை வழங்கியதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக செய்தி சேகரிக்க ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் இருந்த நிருபர்களை சந்திக்காமல் ரங்கசாமி சென்றார். ஆளுநர் மாளிகையில் இருந்து சட்டமன்றத்துக்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமி தனது அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

Also read: மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிய ‘குட்டி கோவா’... புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

பின்னர், மீண்டும் 11.30 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு 2வது முறையாக சென்றார். அப்போது திருத்தி அமைக்கப்பட்ட இலாகா பட்டியலை கொடுத்துள்ளார். பின்னர், 11.50 மணிக்கு வெளியே வந்த ரங்கசாமி, நிருபர்களிடம் அமைச்சர்களின் இலாகா பட்டியலை வழங்கியதை உறுதி செய்தார்.

இலாகா பட்டியலுக்கு  தமிழிசை ஒப்புதல் தந்து தலைமைச் செயலருக்கு அனுப்புவார். அவர் அதற்கான உத்தரவை பிறப்பித்து அரசிதழில் வெளியிடுவார்.  இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் இன்று இரவோ, நாளை காலையோ அமைச்சர்களின் இலாக்கா பட்டியல் அரசிதழில் வெளியாகும் வாய்ப்புள்ளது. அப்போதுதான் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகா விபரம் தெரியவரும் என்றார்.
Published by:Esakki Raja
First published: