சுருக்குமடி பிரச்சனையால் கடலிலும், கரையிலும் மீனவர்கள் மோதல்... போலீசார் துப்பாக்கிச்சூடு

சுருக்குமடி பிரச்சனையால் கடலிலும், கரையிலும் மீனவர்கள் மோதல்

அரியாங்குப்பம் காவல்நிலைய போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

 • Share this:
  புதுச்சேரியில் சுருக்குமடி வலைப் பிரச்னையால் கடலிலும், கரையிலும் மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலை தடுக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

  புதுச்சேரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை உள்ள நிலையில், சில மீனவ கிராமத்தினர் தொடர்ந்து அவ்வலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மீனவர்களிடையே அடிக்கடி மோதல் மூள்கிறது. சனிக்கிழமை காலை நல்லவாடு மீனவர்கள் சுருக்குமடி வலையுடன் மீன்பிடிக்க, அதற்கு, வீராம்பட்டினம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடலிலேயே இருதரப்புக்கும் மோதல் ஏற்பட, பிடித்து வைத்திருந்த மீன்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கரைக்கு வந்தவர்கள், அவரவர்கள் தரப்பு மீனவர்களுடன் ஈட்டி, கம்பு, வீச்சரிவாள் சகிதம் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். சுருக்குமடி வலையுடன் கடலில் படகுகள் நிற்கும் இடத்திற்கு மீண்டும் சென்று, அங்கும் மோதிக் கொண்டனர்.  அரியாங்குப்பம் காவல்நிலைய போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இவர்கள் இருதரப்பு மீனவர்களையும் கடற்கரையில் இருந்து விரட்டியடித்தனர். மீனவர்கள் கலைந்து செல்லாததால் வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் மீனவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும் இரு தரப்பு மோதலை கட்டுப்படுத்த 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

  இந்நிலையில், மாலை நேரத்தில் வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் பத்துக்கும் மேற்பட்டோர், படகுகளில் நல்லவாடு பகுதிக்கு சென்று, கடலிலேயே பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்தனர். இதனால், கோபமடைந்த உள்ளூர் மீனவர்கள் கடற்கரையில் கட்டைகள் மற்றும் கற்கள் போன்ற ஆயுதங்களுடன் குவிந்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் நல்லவாடு மீனவர்களை சமாதானப்படுத்தியதோடு, வீராம்பட்டின மீனவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: