ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

மத்தியில் உள்ள ஆளுங்கட்சிக்கு சாதகமாக இடஒதுக்கீடு அறிவிப்பாணைகள் திரும்பப் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் 5 நாட்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த 5ஆம் தேதி உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்று புதுச்சேரி அரசு கடந்த 8ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், மத்தியில் உள்ள ஆளுங்கட்சிக்கு சாதகமாக இடஒதுக்கீடு அறிவிப்பாணைகள் திரும்பப் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதே தவிர, இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற அனுமதி வழங்கப்படவில்லை என வாதிட்டார்.

கொள்கை அடிப்படையில் அமைச்சரவை முடிவின் கீழ் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை திரும்பப் பெறுவது குறித்து அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்காமல் மாநில தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது எனவும் வாதிட்டார். இதற்கு கட்சி பேதம் இல்லாமல் அத்தனை எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவித்தார். இட ஒதுக்கீடு வழங்காமல் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை என மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார்.

புதுச்சேரி அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்கள் தொகை குறித்த புள்ளிவிவரங்கள் ஏதும் இல்லை என்பதால் உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டது என தெரிவித்தனர். துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வரின் ஒப்புதலுடன் தான் இடஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

Must Read : கிராமத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் : காரணம் இதுதான்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய அனுமதியளித்த நிலையில், இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்றது ஏன் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பினர். மேலும், அரசியல் சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்துவைக்க உத்தரவிட்டனர்.

மேலும் மனுவுக்கு முழுமையான விவரங்களுடன் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி பரிந்துரைத்தனர்.

First published:

Tags: Local Body Election 2021, Puducherry