பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்காத மத்திய அரசு: ஐந்து நிமிடங்களில் முடிந்த புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம்

புதுச்சேரி அமைச்சரவை கூட்டம்

முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் 5 நிமிடங்களில் முடிவடைந்தது.

  • Share this:
புதுச்சேரியில் கடந்த பத்து ஆண்டுகளாக மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த முறையும் மார்ச் மாதத்தில் ரூ. 2,042 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கலானது.

அதைத்தொடர்ந்து ரூ. 9,500 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டு மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஊரடங்கு காரணமாக வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசிடம் அனுமதி வந்து விடும் என்ற திட்டமிட்டு நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது.

புதுச்சேரியில் அடுத்த வாரம் பட்ஜெட் கூட்டத்திற்கான சட்டமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தபடி மாலை 6 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் அரசு செயலர்கள் பங்கேற்றனர். ஆனால் 2020-21 ம் ஆண்டு பட்ஜெட்டிற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஐந்து நிமிடத்திலேயே அமைச்சர்கள் கூட்டம் முடிந்தது. பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் மற்றொரு நாள் அமைச்சரவை கூடும் என தெரிகிறது.
Published by:Vijay R
First published: