புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 1991ம் ஆண்டு வெற்றி பெற்றவர் ரங்கசாமி. அப்போது அமைந்த
காங்கிரஸ் அரசில் வேளாண் அமைச்சராக (கடைசி அமைச்சர்) பதவி வகித்தார். பிரம்மச்சாரி, ஆன்மீகவாதி, பி.காம், பி.எல். பட்டதாரி, அதிகம் பேசமாட்டார். மக்களை நேரடியாக சந்திப்பார் என ரங்கசாமிக்கு பல அடையாளங்கள் உண்டு.
தன்னை வெற்றி பெற செய்த தட்டாஞ்சாடி தொகுதி மக்கள் மீது அவர் எப்போதும் தனி பாசம் கொண்டிருந்தார். அடுத்து அமைந்த காங்கிரஸ் அரசில் கல்வி அமைச்சராக பதவி வகித்தார். அடுத்து முதல்வராக நீடித்தார். தொகுதி மீது மட்டுமே பாசம் என்ற குற்றச்சாட்டால் காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் உருவாகின. இதுவே அவரை பதவியில் இருந்து தூக்கி எறிய காரணமானது. அப்போதும் மவுனமே ஆயுதமாக கொண்டார் ரங்கசாமி.
அப்போது இருந்த பீடி சாமியார் என அழைக்கப்பட்ட அப்பா பைத்தியம் சாமிகளின் தீவிர பக்தர் ரங்கசாமி. அவரது சமாதி சேலம் சூரமங்கலத்தில் உள்ளது. தனது எந்த முடிவையும் அப்பாசாமி கோயிலுக்கு சென்று தான் முடிவு செய்வார் ரங்கசாமி. அப்படி அவர் ஆசியுடன் மாநில கட்சியான என்.ஆர்.("நமது ராஜ்ஜியம்")காங்கிரசை துவக்கினார். இரண்டாவது முறையாக ஆட்சியையும் பிடித்துள்ளார்.
புதுச்சேரியில் தொழில் துவங்க வாருங்கள்.. முதலீட்டாளர்களுக்கு தமிழிசை அழைப்பு..
பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தாலும் சுதந்திரமாக இல்லை என எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. முதல்வராகி ஓராண்டாகியும் பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்திக்கவில்லை. இதனால் புதுச்சேரிக்கான வளர்ச்சி திட்டங்கள் தடுக்கப்படுவதாகவும் டெல்லி செல்ல முதல்வர் பயப்படுகிறார் என்ற விமர்சனங்கள் ரங்கசாமியை விட்டு வைக்கவில்லை.
இந்த நிலையில் தான் நாளை (24ம் தேதி) மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா வருகிறார். அவர் வருகையால் ஆட்சி மாற்றம் வரும், சில எம்எல்ஏக்கள் கட்சி மாறுவார்கள். பாஜக ஆட்சி அமையும். ரங்கசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என அதிரடி தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியது.
இதற்கெல்லாம் ரங்சாமியின் பதில் என்ன...? மவுனம் தான் அவரது ஆயுதம். திலாசுபேட்டையில் உள்ள தனது வீட்டு அருகிலேயே தனது ஆன்மீக குருவுக்கு ரங்கசாமி கோயில் கட்டி வழிபட்டு வருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் கோயிலில் அன்னதானம் செய்வது அவரது வழக்கம். இன்றும் அதுவே நடந்தது.
அப்பாசாமிக்கு படையல் முடித்து மதியம் ஒரு மணிக்கு அன்னதானம் முடித்து கோயில் திண்ணையில் ரங்கசாமி ஓய்வாக அமர்ந்தார். நாளை என்ன நடக்கும்...? என்பது மாநிலத்தின் முக்கிய கேள்வி. இதற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பதில் மவுனமாகவே உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.