ஆளுநர் விவகாரம் - புதுச்சேரி சட்டசபையில் கூச்சல், குழப்பம்; அதிமுக வெளிநடப்பு

அதிமுக எம்எல்ஏ-க்கள் பேனர் ஏந்தி சட்டமன்றத்திற்குள் வந்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் உள்ளே வந்த அதிமுக உறுப்பினர்கள், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மின் கட்டண உயர்வில் திமுக தமிழகம்-புதுச்சேரியில் இரட்டை வேடம் எனக் குற்றம்சாட்டி பேனர் ஏந்தி சட்டமன்றத்திற்குள் வந்தனர்.

  • Share this:
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று சிவக்கொழுந்துவிற்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மோட்டார் வாகன வரி விதிப்புச் சட்ட முன்வரைவை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் கொண்டு வந்தார். அது நிறைவேற்றப்பட்டவுடன் அதிமுக உறுப்பினர் அன்பழகன், அலுவல் ஆய்வு முடிவுப்படி பட்ஜெட் குறித்து இன்று ஏன் விவாதம் இல்லை? என்றும் பட்ஜெட்டிற்கு ஆளுநர் அனுமதி இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் சிவக்கொழுந்து, எல்லாப் பிரச்னைக்கும் முடிவு வரும் எனக் கூறினார். பட்ஜெட்டிற்கு நிச்சயம் ஆளுநர் அனுமதி கொடுப்பார்; இல்லையென்றால் கொடுக்க வைப்போம் என அரசு கொறடா அனந்தராமன் கூற, அதிமுக-பாஜகவினருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடுமையான  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையில் 15 நிமிடம்  கூச்சல் குழப்பம் நிலவியது.

இறுதியாக முதல்வர் நாராயணசாமி பேசினார். அப்போது அவர், மே 13ம் தேதி அனுப்பிய பட்ஜெட் கோப்பிற்கு ஜூலை 17ம் தேதி மத்திய அரசு அனுமதி கொடுத்தது. கடந்த 4 ஆண்டுகளாய் எந்த விதிமுறையும் மீறாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே முறையில்தான் இந்த முறையும் பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. இதன் கோப்பு துணைநிலை ஆளுநருக்கு நேற்று இரவு அனுப்பப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.

Also read: பொய் புகார் கூறும் எம்.எல்.ஏக்கள் மனநல மருத்துவர்களை அணுகவும் - கிரண்பேடி காட்டம்

மேலும், பட்ஜெட் தாக்கல் செய்ய ஆளுநர் அளித்த அனுமதி கடிதத்தை அவையில் காண்பித்தார். அப்போது அன்பழகன், புதுச்சேரியில் எல்லாப் பிரச்னையிலும் முதல்வரும் ஆளுநரும் இரட்டை வேடம் போடுகிறார்கள். இதனால் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும். புதுச்சேரி அரசை மத்திய அரசு  முடக்கம் செய்ய வேண்டும் எனப் பேசினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், எம்எல்ஏ-க்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் கூறியிருக்கிறார். மனநலத்துடன் இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். சட்டமன்றத்தில் மனநலமுடன் உறுப்பினர்கள் இருக்கிறார்களா? என அன்பழகன் கேட்டார்.

இதற்கு சபாநாயகர் சிவக்கொழுந்து, மனநலம் பாதிப்பு இல்லையென சான்றிதழ் கொடுக்கத் தயார் எனக் கூறினார்.
அப்போது அதிமுக அன்பழகன், பட்ஜெட் விவகாரத்தில் ஆளுநர் தவறு செய்திருந்தால் மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும். அதே நேரத்தில் புதுச்சேரி அரசை முடக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே சட்டமன்றத்திற்கும் வந்தும் திமுக உறுப்பினர்கள் சிவா, கீதா ஆனந்தன், வெங்கடேசன் ஆகியோர் அவைக்கு வரவில்லை. நடவடிக்கையில் பங்கேற்ற விரும்பவில்லை என சிவா எம்எல்ஏ தெரிவித்தார்.
Published by:Rizwan
First published: