ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதுச்சேரியில் நாளை தேர்தல் - 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டி!

புதுச்சேரியில் நாளை தேர்தல் - 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டி!

புதுச்சேரியில் நாளை தேர்தல்

புதுச்சேரியில் நாளை தேர்தல்

வாக்குச்சாவடிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் உரிய பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

நாளை புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் நாளை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் 70 பேரும், சுயேச்சை, இதர வேட்பாளர்களும் அடங்கும். 35 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரி  முழுவதும் 4,72,341 ஆண் வாக்காளர்களும், 5,31,383 பெண் வாக்காளர்களும் இதர பிரிவினர் 116, புலம்பெயர்ந்த இந்தியர்கள் 357, பணி வாக்காளர்கள் 310 உட்பட 10,04,507 வாக்காளர்கள் உள்ளனர்.  100 சதவீத வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள ஆதார்கார்டு, பான்கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம். இதுதவிர தேர்தல் துறை சார்பில் வாக்காளர் சிலிப்பும் வழங்கியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 635 இடங்களில் 1,558 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 952 பிரதான ஓட்டுச்சாவடிகளும், 606 துணை ஓட்டுச்சாவடிகளும் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் முற்றிலும் பெண்களால் இயங்கும் ஒரு ஓட்டுச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்காக 1,558 கண்ட்ரோல் யூனிட், 1677 ஓட்டுப்பதிவு எந்திரங்களும், 1558 விவிபாட் எந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது. அதிகபட்சமாக 16 வேட்பாளர்கள் போட்டியிடும் உழவர்கரை, நெல்லித்தோப்பு தொகுதியில் மட்டும் 2 ஓட்டு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

6835 பேர் ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 2833 பெண் ஓட்டுச்சாவடி அலுவலர்களும், 719 மத்திய அரசு ஊழியர்களும் அடங்கும். மாநில போலீசார் 2420 பேரும், 901 ஐஆர்பிஎன் போலீசாரும், கர்நாடகாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 100 பேர் உட்பட 49 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் 1490 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2928 பேரும், மாற்றுத்திறனாளிகள் 1,546 பேரும், கொரோனா பாதித்து தனிமையில் உள்ள 34 பேரும், அத்தியாவசிய பணியில் உள்ள 68 பேரும், வாக்குச்சாவடி பணியில் உள்ள 8,117 பேர் உள்ளிட்ட 12,693 பேர் தபால் ஓட்டளித்துள்ளனர்.

வாக்குச்சாவடிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் உரிய பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டது.

வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அதிகாரிகள், அலுவலர்கள் அதனை பெற்றுக்கொண்டனர். தேர்தல் தினமான நாளை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கிருமிநாசின மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. வாக்குச்சாவடிக்குள் நுழையும் வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு கையுறை வழங்கப்படும்.

Also read... இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக சுகாதார பணியாளர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர் - ராதாகிருஷ்ணன்!

புதுச்சேரியில் 278, காரைக்காலில் 30, மாகே 8, ஏனாமில் 14 என 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஏனாமில் உள்ள 16 ஓட்டுச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படையினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சாவடிகள் அனைத்திலும் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் ஆகுயவற்றின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பதட்டமான வாக்குச்சவடிகளின் வெளியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 7 மணி வரை நடக்கிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Puducherry, Puducherry Assembly Election 2021