புதுச்சேரியில் மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வார்கள் - பாஜக மாநில தலைவர் சாமிநாதன்

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன்

உச்சநீதிமன்ற தீர்ப்பு இருந்தாலும், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை என புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் கூறியுள்ளார்.

 • Share this:
  புதுச்சேரியில் மேலும் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யவுள்ளதாக புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். ஆளும் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

  30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில், காங்கிரஸ்- திமுக கூட்டணி 19 இடங்களுடன் ஆட்சி அமைத்தது. அதேசமயம், எதிர்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் 7 இடங்களையும், அதிமுக 4 இடங்களையும் கைப்பற்றியது. இதனைதொடர்ந்து மத்திய அரசு 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்து உத்தரவிட்டது. அதன்பின்னர், அரசுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய, காங்கிரஸ் எம்.எல்.ஏ தனபால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகிய 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் அண்மையில் அடுத்தடுத்து பதவியில் இருந்து விலகினர்.

  இதனால், சட்டப்பேரவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணியின் பலம் 14 ஆக சரிந்தது. நியமன எம்.எல்.ஏக்களுடன் சேர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்தது. இதனிடையே, வரும் 22ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க புதிய துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ள சூழலில், நியமன எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமை உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

  இதுதொடர்பாக விளக்கமளித்த வழக்கறிஞர் ராமச்சந்திர மூர்த்தி, உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் உத்தரவின்படி நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியும் என்று குறிப்பிட்டார். உச்சநீதிமன்ற தீர்ப்பு இருந்தாலும், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை என புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் கூறியுள்ளார். நியமான எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தை சட்ட ரீதியாக அணுக தாங்களும் தயார் என காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

  இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார். யாரையும் கட்டாயப் படுத்தியோ, மிரட்டியோ பாஜகவில் சேர்க்க வில்லை என்றும் காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்பதால் அந்த கட்சியை விட்டு விலகி வருவதாகவும் சாமிநாதன் கூறினார்.

  இந்த நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நியமன எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் என்று குறிப்பிட்டு தமிழிசை கடிதம் எழுதியது மிகப்பெரிய தவறு என்றார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், வரும் சட்டமன்ற கூட்டத்தில் தங்களின் நிலைப்பாடு குறித்து நாளை முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: