Home /News /national /

புத்தாண்டு கொண்டாட்டம் : புதுச்சேரியில் மதுபானம் விற்க 3 மணி நேரம் தடை

புத்தாண்டு கொண்டாட்டம் : புதுச்சேரியில் மதுபானம் விற்க 3 மணி நேரம் தடை

மதுக்கடை

மதுக்கடை

புதுச்சேரியில் 2 முறை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

புதுச்சேரியில் டிசம்பர் 31  இரவு 10 மணி முதல் இரவு 1 மணி வரை மதுபானம் விற்க, பொது இடங்களில் அருந்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், புதுச்சேரியில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க கோரி, கரிகாலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுக்களில், கொரோனா ஊரடங்கு தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், அடிப்படை கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதுவை அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், ஏற்கனவே புதுவையில் இருவர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் குவிந்து வருவதால், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது புதுவை அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் 50 % இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
இரவு 12:30 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டது. பொது இடங்களில் மதுபானம் அருந்த அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கட்டுப்பாடுகள் விதித்தாலும் மது அருந்துபவர்கள் அதனை கடைபிடிக்க மாட்டார்கள் என தெரிவித்தனர். மதுபானம் விற்கப்படாமல் இருந்தாலே பல ஆபத்துகள் தவிர்க்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள், புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 3 மணி நேரம் மதுபானம் விற்க தடை விதித்தனர்.

அதன்படி, டிசம்பர் 31 இரவு 10 முதல் இரவு 1 மணி வரை மதுபானம் விற்கவும் , பொது இடங்களில் அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் மற்றும் விடுதிகளில் கூட இரவு 10 முதல் 1 மணி வரை மதுபானம் விற்பனை கூடாது என தெரிவித்த நீதிபதிகள்
2 முறை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும் பொது இடங்களில் நடைபெறும்
புத்தாண்டு கொண்டாட்டங்களில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்றும் புதுச்சேரி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Published by:Vijay R
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி