ஹோம் /நியூஸ் /இந்தியா /

FIREWALL Game விபரீதம்.. தொடர்ந்து 4 மணிநேரம் வெறித்தனமாக விளையாடிய சிறுவன் அப்படியே மயங்கி பலியான பரிதாபம்

FIREWALL Game விபரீதம்.. தொடர்ந்து 4 மணிநேரம் வெறித்தனமாக விளையாடிய சிறுவன் அப்படியே மயங்கி பலியான பரிதாபம்

FIREWALL Game விபரீதம்.. தொடர்ந்து 4 மணிநேரம் வெறித்தனமாக விளையாடிய சிறுவன் அப்படியே மயங்கி பலியான பரிதாபம்

பப்ஜி, ப்ளூவேல், பயர்வால் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒட்டுமொத்தமாகத் தடை செய்தால் மட்டுமே இதுபோன்ற விபரீதங்களைத் தடுக்க முடியும் என்கிறார்கள் பெற்றோர்கள்.

 • 2 minute read
 • Last Updated :

  ப்ளூவேல், பப்ஜி விளையாட்டுகளை அடுத்து தற்போது சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரைக் குடிக்கப் புறப்பட்டுள்ளது பயர் வால் என்ற ஆன்லைன் விளையாட்டு., புதுச்சேரியில் இந்த ஆன்லைன் விளையாட்டிற்கு 12ம் வகுப்பு படிக்கும் மாணவனின் உயிர் இரையாகியுள்ளது.

  கடந்த காலங்களில் மாணவ, மாணவியர் மற்றும் இளைய தலைமுறையை அடிமைப்படுத்தி பைத்தியக்காரர்களாக்கி ஒரு கட்டத்தில் அவர்களின் இன்னுயிர்களையும் பறித்த விளையாட்டுகள் ப்ளூவேல் மற்றும் பப்ஜி. இவற்றால் உயிர்பலிகள் தொடர்ந்ததால் எச்சரிக்கை அடைந்த மத்திய அரசு இவற்றைத் தடை செய்தது

  பயர்வால் ஜீரோ ஹவர் என்ற விளையாட்டு இளைஞர்களை அடிமையாக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த விளையாட்டிற்கு முதன் முறையாக புதுச்சேரியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் தர்ஷன் பலியாகியுள்ளார்.

  புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் 16 வயதான தர்ஷன்; இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். நன்கு படிக்கக் கூடிய தர்ஷன், கொரோனா ஊரடங்கின் போது ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார்.

  அதில், அவருக்கு பயர்வால் என்ற ஆன்லைன் விளையாட்டு அறிமுகமாகியுள்ளது.  அந்த விளையாட்டிற்கு அடிமையான தர்ஷன் மணிக்கணக்கில் விளையாட ஆரம்பித்துள்ளார். அதைப் பார்த்த பெற்றோர் பயந்து போய் அடிக்கடி மகனைக் கண்டித்துள்ளனர் எனினும் அவர் கேட்கவில்லை.

  இந்த நிலையில், திங்கட்கிழமை மாலை, வீட்டின் அறையில் அமர்ந்தபடி காதுகளில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு பயர்வால் விளையாடியுள்ளார். விளையாட்டின் சத்தத்தை அவர் அதிகமாக வைத்து விளையாடியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து 4 மணிநேரம் தர்ஷன் பைத்தியம் பிடித்தது போல் பயர்வால் விளையாடியுள்ளார். இதனால் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்

  பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் அவரை உடனடியாக அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

  இதுகுறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த மாணவன் தர்ஷன், அடிப்படையில் நல்ல குணம் கொண்டவர் என்றும் நன்கு படிக்க கூடியவர் என்றும் அக்கம்பக்கத்தினர் வேதனையுடன் கூறுகின்றனர்

  ஆன்லைன் விளையாட்டுகளைப் பொருத்தவரை, பொழுதுபோக்கிற்காக என்று ஆரம்பித்து பின்னர் பொழுதையே விழுங்கக் கூடிய அடிமைத் தனத்தில் நம்மைத் தள்ளி விடும் என்பதால் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர் மத்தியிலும் செல்போன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு தேவை என்கின்றனர் மருத்துவர்கள்.

  பப்ஜி, ப்ளூவேல், பயர்வால் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒட்டுமொத்தமாகத் தடை செய்தால் மட்டுமே இதுபோன்ற விபரீதங்களைத் தடுக்க முடியும் என்கிறார்கள் பெற்றோர்கள்.

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: Addicted to Online Game, Crime | குற்றச் செய்திகள், Puducherry