கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா: தேர்தல் பிரச்சாரங்களை ரத்து செய்த பிரியங்கா காந்தி!

கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா: தேர்தல் பிரச்சாரங்களை ரத்து செய்த பிரியங்கா காந்தி!

பிரியங்கா காந்தி

கொரோனா நோயாளியுடன் நேரடி தொடர்பில் இருந்ததால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

  • Share this:
5 மாநில சட்டமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அசாம், மேற்குவங்கத்தில் 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் அடுத்த சில தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனிடையே தேசிய தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களிலுன், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கொரோனாவும் ஒரு பக்கம் தன் பிடியை இறுக்கியுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 10 வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அரசியல் பிரமுகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் வந்ததால் அவர் தன்னை வீட்டிலேயே சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பிரியங்கா காந்திக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்றே வந்துள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் அவரை வீட்டுத்தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர் என்பதால் பிரியங்கா தன்னை வீட்டிலேயே சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.இதன் காரணமாக அவர் தேர்தல் பரப்புரைகளை ஒத்திவைத்துள்ளார். இன்று அசாமிலும், நாளை தமிழகத்திலும், நாளை மறுநாள் கேரளாவிலும் தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய தனிமையில் இருப்பதால் இந்த நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளார்.

பிரியங்கா காந்தி தனது பரப்புரையை ரத்து செய்துள்ளதால் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை (ஏப்ரல் 3ம் தேதி) வருகை தருவதாக இருந்த பிரியங்கா காந்தி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று விட்டு பின்னர் கன்னியாகுமரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வதாக இருந்தார்.

தமிழகம், கேரளாவில் ஏப்ரல் 4ம் தேதி இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரைகள் முடிவுக்கு வருவதால் பிரியங்கா காந்தி தனது பரப்புரை பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: