மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி

முககவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் கூட்டம் கூடுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

  • Share this:
    கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் இம்மாதம் 16 ஆம் தேதி பேச திட்டமிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

    கொரோனா வைரஸ் தொற்றின் 2ஆவது அலையின் தாக்கம் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய-மாநில அரசுகளின் தொடர் செயல்பாடுகளால் கொரோனா தினசரி பரவல் மற்றும் உயிரிழப்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தினசரி பாதிப்பு அளவை விட தொற்றில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலில் கவலைக்குரியதாக காணப்படும் 8 வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலிக்காட்சி வழியாக கலந்துரையாடினார். அப்போது அவர், மலைவாழிடங்கள், சந்தைகள் போன்றவற்றில் முககவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் கூட்டம் கூடுவது குறித்து கவலை தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்று பரவலாக அதிகரித்துள்ள மாவட்டங்களைக் கொண்டுள்ள அல்லது மற்ற மாநிலங்களில் இருப்பதைப்போல தொற்று பரவலில் சரிவை சந்திக்காத மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் உரையாட திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக்காட்சி வழியாக 16ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திரபிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 31 ஆயிரத்து 443 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 9 லட்சத்து 07 ஆயிரத்து 282 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 2,020 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,10,784 ஆக உயர்ந்து உள்ளது. அதன்படி உயிரிழப்பு விகிதம் 1.32 சதவீதமாக உள்ளது. 24 மணிநேரத்தில் 49,007 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைவோர் விகிதம் 97.28 சதவீதமாக உள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4,31,315 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.40 சதவீதமாக உள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38 கோடியே 14 லட்சத்து 67 ஆயிரத்து 646 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    இந்நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் பல்ஸ் ஆக்சி மீட்டர், குளுக்கோமீட்டர், ரத்த அழுத்த மானிட்டர், நெபுலைசர் மற்றும் டிஜிட்டல் தெர்மாமீட்டர் ஆகிய 5 மருத்துவ சாதனங்கள் அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றின் விலை அதிகமாக உள்ளது. இந்நிலையில், இவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த மருத்துவ சாதனங்கள் மீதான லாபம் வினியோகஸ்தர் மட்டத்தில் இருந்து 70 சதவீதம்தான் இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: