Cyclone Yaas : யாஸ் புயலால் மேற்குவங்கத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்: பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்

யாஷ் புயல்

ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிடுகிறார்.

  • Share this:
    யாஸ் புயலின் கோரத்தாண்டவத்தால் மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிடுகிறார்.

    வங்கக்கடலில் உருவான யாஸ் புயல், ஒடிசா மாநிலம் பாரதீப் மற்றும் சாகர் தீவுகள் இடையே புதன்கிழமை காலை கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது 130 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் வீடுகளின் மேற்கூரைகள் சின்னாபின்னமாகின.

    யாஸ் புயலின் கோரத்தாண்டவத்தால், மேற்குவங்கம் - ஒடிசா மாநில எல்லையோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. துத்தாபூர் பள்ளி பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளதால், அவற்றை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மேற்கு வங்க மாநிலம் மெதினிபூரில் கடற்கரையோரம் இருந்த கடைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. புயல் கரையை கடந்தாலும் மெதினிபூரில் கடல் சீற்றமாக உள்ளது. கனமழையால் ஒருகோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 15 லட்சம் பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    புயல் வெள்ளத்தால் ஒடிசா மாநிலம் பாத்ராக் பகுதியில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

    பாலாசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு, படகில் சென்று மீட்பு படை வீரர்கள் நிவாரண பொருட்களை வழங்கினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

    அதிதீவிர புயலாக இருந்த யாஸ் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறி ஜார்க்கண்டை நோக்கி நகர்ந்தது. இதனால் ராஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

    Must Read : எந்த இணை நோயும் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் மரணம் தமிழகத்தில் அதிகரிப்பு... காரணம் என்ன?

    இந்நிலையில், ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பார்வையிடுகிறார். முதலில் புவனேஸ்வர் செல்லும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் பாலாசூர், மெதினிபூர் ஆகிய பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகிறார். அதன்பின் மேற்குவங்கம் செல்கிறார்.
    Published by:Suresh V
    First published: