பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்களுடன் 2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் டெல்லியில் உள்ள தல்கதோரா அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 38 லட்சம் பேர் காணொலி காட்சி வழியாக பங்கேற்றனர். இதில், பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் பதற்றம் இன்றி எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற உத்தியை, பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.
மாணவ, மாணவிகள், தங்கள் தாய் செய்யும் பணிகளை உற்றுநோக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, அதன் மூலம் நேர மேலாண்மை திறனை கற்றுக்கொள்ள முடியும் என்று அறிவுரை வழங்கினார். திறமைகளை அந்தஸ்து உள்ளிட்டவற்றுடன் இணைத்து பார்க்கக்கூடாது என்றும், கற்றலில் குழந்தைகளுக்கு அழுத்தம் தரக்கூடாது என்றும் பெற்றோர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதேநேரத்தில், மாணவர்கள் தங்களது திறமைகளை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சில மாணவர்கள் தங்களன் படைப்பாற்றலை, தேர்வுகளில் ஏமாற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர் என்று கூறிய அவர், வாழ்க்கை முழுவதும் அது பயன்படாது என்றும் தெரிவித்தார்.மேலும், கடின உழைப்பு அல்லது சாமர்த்தியம் எது அதிக பலனளிக்கும் என்று மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, சாதூர்யம் மற்றும் கடின உழைப்பு இரண்டுமே அவசியம் என்று கூறினார். ஒன்று இல்லாமல் மற்றொன்று பயனளிக்காது என்றும் விளக்கம் அளித்தார்.பிற மொழிகளைக் கற்றுக்கொள்வது எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பிற மொழிகளில் சில வரிகளையாவது கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று கூறினார். பிற மொழி பேசுபவர்களிடம் அவர்களில் மொழியில் சில வரிகள் பேசும் போது உறவு நெருக்கமாகும் என்று விவரித்தார்.
பரிக்சா பே சர்ச்சா என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் 38 லட்சம் பேர் பங்கேற்றனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 15 லட்சம் அதிகம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.