கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக இன்று இரவு பிரதமர் மோடி கேரளா புறப்பட்டு செல்கிறார். நாளை மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் கேரள மாநிலம் தனித்தீவு போல காட்சியளிக்கிறது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தொடர் கனமழையால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொல்லம், பத்திணம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், காசர்கோடு, பாலக்காடு, ஆலுவா மற்றும் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணையை ஒட்டியுள்ள உப்புதரா,செறுதோனி, மூணாறு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எர்ணாகுளம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள 10 மாடி கட்டடம் வரை வெள்ளம் மூழ்கியது. கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஆறுபோல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் விமான நிலையம் சனிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவை வரும் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. உடமைகளை இழந்து தவித்து வரும் மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை இடுக்கி மற்றும் வடக்கு கேரளா பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. நாளை வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 14 மாவட்டங்களுக்கும் அடுத்த 3 நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மழை வெள்ளத்தால் இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 41 பேர் காயமடைந்துள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 1,65,538 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2,857 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், 3,393 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே 18 தேசிய பேரிடர் மீட்பு படை மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், கூடுதலாக மேலும் 12 மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட கூடுதல் மீட்பு படைகளை அனுப்ப வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து இன்று முதல் மீட்பு பணிகளில் 23 ஹெலிகாப்டர்களும், 200 படகுகளும் கூடுதலாக ஈடுபடும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் நாளை மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை பிரதமர் மோடி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.