பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை விரைவில் குறைக்கப்படுமா? - பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில்!

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை விரைவில் குறைக்கப்படுமா? - பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில்!

பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் தான் பேசியிருப்பதாகவும், அவர்களிடம் உற்பத்தியை அதிகரிக்க சொல்லி அழுத்தம் தந்திருப்பதாகவும் கூறினார் தர்மேந்திர பிரதான்.

  • Share this:
ஓரிரு மாதங்களில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறையும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் போன்றவற்றின் விலை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கடந்த ஒரே மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் ஒன்றில் விலை ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்ந்தது இல்லத்தரசிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது ஒரு புறம் என்றால் பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயை நோக்கி நகர்த்தி வருகின்றன. அதுவும் கூட ஒரிரு வாரங்களில் 100 ரூபாயை கடக்கும் என்றே கருதப்படுகிறது. பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை உயர்வு என்பது காய்கறி, பால் பொருட்கள், பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை மறைமுகமாக உயர்த்தி விடுகிறது. இது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக மாறியிருக்கிறது. பெட்ரோல், டீசலின் விலை குறையுமா அல்லது இதே நிலை தான் நீடிக்குமா என்பதை சாமானியர்கள் அதிர்சியுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் வாரணாசியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு குறித்து பேசியுள்ளார்.

தர்மேந்திர பிரதான் கூறுகையில், கொரோனா காலத்தில் தேவை பெருமளவு குறைந்ததால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை குறைத்தன. இருப்பினும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை பல்வேறு நாடுகள் எட்டிவிட்டாலும் கூட குறைவான எரிபொருள் உற்பத்தியின் மூலம் மேற்கண்ட நாடுகள் அதிக லாபத்தை ஈட்டி வருகின்றன. எனவே தான் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

இருப்பினும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் தான் பேசியிருப்பதாகவும், அவர்களிடம் உற்பத்தியை அதிகரிக்க சொல்லி அழுத்தம் தந்திருப்பதாகவும் கூறினார். டீசல், பெட்ரோல் மற்றும் எரிவாயு விலைகள் எப்போது குறையும் என்பதை யாராலும் உறுதியாகக் கூற முடியாது என்று அவர் கூறினார். “ஆனால் சமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்” என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இதனிடையே பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது, சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பை சிலிண்டர் மீது உட்கார்ந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் நடத்தினர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் வீட்டு முன்பு நேற்று இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.
Published by:Arun
First published: