அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமாயண மாநாட்டை தொடங்கி வைத்தார் குடியரசுத்தலைவர்

ராம்நாத் கோவிந்த்

பிரமாண்ட ராமர் கோவிலின் மாதிரி வடிவம் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு பரிசாக வழங்கப்பட்டது.

 • Share this:
  உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இரண்டு மாத காலத்திற்கும் மேல் நடைபெற இருக்கும் ‘ஜன ஜன கே ராம்’ என்ற ராமாயண மாநாட்டை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக உத்தரபிரதேசத்திற்கு சென்றார். 4ஆவது நாளான நேற்று, அவர் அயோத்திக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டார். அவருடன் அவருடைய மனைவி சவீதா கோவிந்த் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் உயர் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

  நேற்று காலை 9.40 மணிக்கு ரயில் புறப்பட்டது. அயோத்திக்கு செல்லும் ரயில்வே பாதையை ஒட்டிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. வழியில் உள்ள லெவல் கிராசிங்குகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டிருந்தன. லக்னோவில் இருந்து 134 கி.மீ. தொலைவில் உள்ள அயோத்திக்கு காலை 11.25 மணிக்கு ரயில் சென்றடைந்தது.

  ரயில் நிலையத்தில் குடியரசுத்தலைவரை, மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அயோத்தி மேயர் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், கார் மூலம் அங்கிருந்து அயோத்திக்கு புறப்பட்டார். அயோத்திக்கு செல்லும் 3 கி.மீ. தூரம் முழுவதும் கலாச்சார துறை சார்பில் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கே மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.

  ராம்நாத் கோவிந்த், குடியரசுத்தலைவராக பதவியேற்ற பிறகு அயோத்திக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும். அவர் அயோத்தியில் ராம்கதா பார்க் என்ற இடத்துக்கு போய் சேர்ந்தார். அங்கு 2 மாத காலத்துக்கு மேல் நடைபெற இருக்கும் ‘ஜன ஜன கே ராம்’ என்ற ராமாயண மாநாட்டை குடியரசுத்தலைவர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாநாடு தொடர்பான அஞ்சல் உறையையும் வெளியிட்டார்.

  அதனைத் தொடர்ந்து மாநாட்டில் குடியரசுத்தலைவர் பேசுகையில், ராமர் கோவில் கட்டுமான பணி நடக்கும் நகருக்கு வந்துள்ளேன். ராமர் இல்லாமல் அயோத்தியே இல்லை. ராமர் இருக்கும் இடத்தில்தான் அயோத்தி இருக்கும். இந்த நகரில் ராமர் நிரந்தரமாக வாழ்கிறார். அயோத்தி என்றால், யாரும் போர் தொடுக்க முடியாதது என்று பொருள்.

  ராம்நாத் கோவிந்த்


  ராமர் மீது என் பெற்றோர்கள் மரியாதை கொண்டவர்கள். அதனால்தான் இந்தப் பெயரை எனக்கு வைத்துள்ளனர். ராமர் வனவாசம் இருந்தபோது, போர் தொடுக்க அயோத்தியில் இருந்தோ, மிதிலையில் இருந்தோ படைகளை வரவழைக்கவில்லை. வானரங்களை வைத்து படை அமைத்தார். அந்த அளவுக்கு ஆதிவாசிகள் மீது ராமர் பாசம் கொண்டவர் என்று கூறினார்.

  Must Read : பண்டிகைகளால் அதிகரிக்கும் தொற்று... கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

  அதனைத் தொடர்ந்து, ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் ராமஜென்மபூமிக்கு சென்றார். அங்குள்ள தற்காலிக ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலையை குடும்பத்தினருடன் வழிபட்டார். மரக்கன்று நட்டு வைத்தார். அங்கே கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ராமர் கோவிலின் மாதிரி வடிவம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அயோத்தி பயணத்தை முடித்துக்கொண்டு, பிற்பகல் 3.35 மணிக்கு சிறப்பு ரயிலில் குடியரத்தலைவர் லக்னோவுக்கு புறப்பட்டார். லக்னோவில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.
  Published by:Suresh V
  First published: