Home /News /national /

குடியரசுத் தலைவர் தேர்தல்.. திசைக்கொரு பக்கமாய் எதிர்க்கட்சிகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்.. திசைக்கொரு பக்கமாய் எதிர்க்கட்சிகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவர் தேர்தல்

 குடியரசுத் தலைவர் தேர்தலை தவிர்க்கும் வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நட்டா, ராஜ்நாத் சிங் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. 

  குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் மம்தா ஒருபுறம் அழைப்பு விடுக்க மறுபுறம் எதிர்க்கட்சிகளிடம் சோனியா ஆதரவு கோர, பாஜகவோ ஒருமித்த கருத்துடன் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என கூற தேர்தள் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

  நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாரை களமிறக்குவது என கட்சிகள் மல்லுக்கட்டத் தொடங்கிவிட்டன. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே காங்கிரஸ் அற்ற கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி இறங்கினார்.

  கடந்த ஆண்டின் இறுதியிலே மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்து, அதற்கான முயற்சி மேற்கொண்டார். அங்கு பேட்டி அளித்த மம்தா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்று உள்ளதா என வினவியதுடன் பாஜகவை எதிர்க்க காங்கிரசுக்கு தெம்பு இல்லை என்றார். தொடர்ந்து, கடந்த பிப்ரவரியில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு, எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். அதை ஸ்டாலினும் ஏற்று அவரே அறிவிப்பும் வெளியிட்டார்.

  அதே நேரத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவும், ஸ்டாலின்,  தேவகவுடா, உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் ஆகியோரை சந்தித்து அணி சேர்க்க முயன்று கொண்டிருந்தார். இதனிடையே குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக அல்லாத பொது வேட்பாளரை தேர்வு செய்ய மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சோனியா நியமித்தார்.

  இதையும் படிக்க: திருப்பதியில் அமைச்சர் ரோஜாவின் கார் ஓட்டுநர், பாதுகாவலர் தடுத்து நிறுத்தம்

  அவரும் சரத் பவாரை கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார், ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்திக்கவும் திட்டமிட்டிருந்தார். இந்த சூழலில்தான் குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியானது. உடனே சுறுசுறுப்படைந்த மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், நவீன் பட்நாயக் உள்ளிட்ட முதலமைச்சர்கள் மற்றும் சீதாராம் யெச்சூரி. டி.ராஜா உள்ளிட்ட 22 தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.

  அதில் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக வரும் 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று ஒருமித்த கருத்து கொண்டோர் ஒத்துழைப்பு தரவேண்டும் என கோரியிருந்தார். ஆனால் மம்தாவின் அழைப்பை ஒருதலைப்பட்சமான முடிவு என விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் யெச்சூரி, அதே தேதியில் ஸ்டாலின், தாக்கரே, பவார் உள்ளிட்டோருடன் சோனியா ஆலோசனை நடத்தவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

  மம்தாவின் இம்முடிவு, அவரை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் முயற்சி என காங்கிரஸ் அணி விமர்சிக்கிறது. இந்த சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். திமுகவைப் பொருத்தவரை மம்தாவை விட காங்கிரஸுடன் உறவு நீடிப்பதையே விரும்பும்.

  மேலும் படிக்க: குடியரசுத் தலைவர் தேர்தல்: திமுக உட்பட 22 எதிர்கட்சிகளை ஆலோசனைக்கு அழைக்கும் மம்தா பானர்ஜி!

  எதிர்க்கட்சிகளிடையே குழப்பம் நிலவி வரும் சூழலில் பாஜக ஒரு பவுன்சரை வீசியுள்ளது.  குடியரசுத் தலைவர் தேர்தலை தவிர்க்கும் வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நட்டா, ராஜ்நாத் சிங் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது.

  இவ்வாறாக இடியாப்பச் சிக்கலாய் வேட்பாளர் தேர்வு நீடித்திருக்க, பழங்குடியினத்தைச் சேர்ந்த முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, மத்திய பழங்குடியினர் நல முன்னாள் அமைச்சர் ஜுவல் ஓரம் மற்றும் கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் போன்றோரில் ஒருவரை முன்னிறுத்த பாஜக திட்டமிட்டு வருகிறது. வெங்கைய நாயுடு போன்றோரை களமிறக்கினால் திமுக ஒருவேளை பரிசீலிக்க வாய்ப்பு உண்டு. எனினும், ஜூன் 15 ஆம் தேதி காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு பிறகே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி தவிர்க்கப்படுமா என்பது தெரியவரும்  என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

  செய்தியாளர்: சசிதரன் 

   
  Published by:Murugesh M
  First published:

  Tags: New president, President

  அடுத்த செய்தி