அரசுகள் மக்களுக்காக எப்போதும் புதிய திட்டங்களை வகுத்துக்கொண்டு தான் இருக்கும். ஆனால் அந்த திட்டங்கள் பற்றி அந்த ஊர் மக்களுக்கு எவ்வளவு தெரிகிறது, எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது, எவ்வளவு பேர் அதனால் பயன் பெற்றார்கள் என்பதை வைத்தே அந்த நாட்டின் வளர்ச்சியும் மக்களின் மேம்பாடும் அமைந்திருக்கும்.
நகரமயமாதல் என்ற கலாச்சாரம் உருவாக தொடங்கிய காலத்தில் இருந்தே நவீனமயமாக்களும் டிஜிட்டல் மயமாக்கலும் தொடங்கியது. டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பல அரசு இயந்திரங்களை டிஜிட்டல் முறையில் இயக்கத்தொடங்கியது இந்தியா. ஒரு கையெழுத்திற்காக நான்கு ஐந்து அலுவலகங்கள் படியேறி அலைந்து திரிந்து 1 சான்றிதழ் வாங்கும் வழக்கம் எல்லாம் மாறிவிட்டது. இணையத்தில் விண்ணப்பம் போட்டுவிட்டு எந்த அலுவலரின் கையெழுத்துக்காக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு டிஜிட்டல் மயமாகி விட்டது.
எனக்கு எந்தெந்த அரசின் சலுகைகள் கிடைக்கும், எந்த சலுகைகளுக்கு நான் தகுதியானவன், என் தொழில் மேம்பாட்டிற்கு எந்தத் திட்டங்கள் உதவும், என் மகன் அல்லது மகள் கல்விக்கு என்ன செய்யும் இந்த அரசு, வேலை வாய்ப்பின் சாத்தியக்கூறுகள் என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு அரசின் துறை சார்ந்த இணையதளங்களை தேட வேண்டி இருக்கும். அந்த சிரமத்தையும் குறைக்க அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. பல்வேறு தளங்களின் இணைப்பாக குறிப்பிட்ட புதிய இணைப்புகளை உருவாக்கி வருகிறது.
அதன் ஒரு பங்காக நேற்று டெல்லியில் நிதி அமைச்சகமும் பெருநிறுவன அமைச்சகமும் இணைத்து தொழில் முனைவோருக்கு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். அரசின் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ சிறப்பு வாரம் (ஜூன் 6 முதல் ஜூன் 12 ) விழா தொடக்கத்தில் அந்த இணையத்தை வெளியிட்டு பேசிய பிரதமர்,
'திட்டங்களின் பலனைப் பெறுவதற்கு மக்கள் அரசை நாடி வந்தனர். ஆனால், இப்போது நிர்வாகத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் இணையதளங்களை தேடி அலையாமல்,அவர்கள் விரல் நுனிக்கே கொண்டு வரவும் முயற்சி செய்து வருகிறோம்' என்றார் .
கடன் வசதியுடன் கூடிய அரசு திட்டங்களுக்கான தேசிய இணையம் - ஜன் சமர்த் இதன் ஒரு முக்கிய படியாகும். இந்த இணையதளம் மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள், MSME தொழில்முனைவோர் ஆகியோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, அவர்களின் கனவுகளை நனவாக்க உதவும். கடந்த எட்டு ஆண்டுகளில் நாடு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களில் நமது நாட்டின் இளைஞர்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர். இந்த இணையம் அவர்களின் திறனை வெளிப்படுத்த உதவும்.
“இளைஞர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்தை எளிதாகத் தொடங்கலாம். அவற்றை எளிதாக நடத்தலாம். எனவே, 30,000 மேற்பட்ட இணக்கங்களைக் குறைப்பதன் மூலமும், 1,500க்கும் மேற்பட்ட சட்டங்களை ரத்து செய்வதன் மூலமும், நிறுவனங்கள் சட்டத்தின் பல விதிகளை எளிமையாக்குவதன் மூலமும், இந்திய நிறுவனங்கள் முன்னேறுவது மட்டுமின்றி, புதிய உயரங்களையும் எட்டுவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்” என்று பிரதமர் கூறினார்.
கார்பன் வெளியேற்றத்தைச் சமாளிக்க முருங்கை, வேம்பு மரங்களை நட வேண்டும்: மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங்
"ஜன் சமர்த்" 13 அரசுத் திட்டங்களுக்கான விண்ணப்பங்களையும் 125+ MLI கள் (அனைத்து பொதுத்துறை வங்கிகள் உட்பட) தேர்வு செய்ய ஒற்றைச் சாளர வசதியை வழங்குகிறது. CBDT, GST, UDYAM, NeSL, UIDAI, CIBIL போன்றவற்றின் நிகழ்நேரச் சோதனைகள் விரைவான கடன் செயலாக்கத்தை உறுதி செய்கிறது.
"ஜன் சமர்த்" இணையம் விவசாயம், வாழ்வாதாரம் மற்றும் கல்விப் பிரிவுகளின் அரசாங்கத் திட்டங்களின் கீழ் கடன்களைப் பெரும் வழிகளை எளிதாக்கும். மேலும் தொழில் மேம்பாடு சார்ந்த திட்டங்கள் பலவும் இந்த இணையதளத்தில் இணைக்கப்படும் என்று செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த இணையத்தளத்தில் நிதி அமைச்சகம் மற்றும் பெருநிறுவன அமைச்சகத்தின் 8 ஆண்டுகள் சாதனை பற்றிய காணொளியும் வெளிடப்பட்டுள்ளது. மேலும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ சிறப்பு வாரதிற்காக ரூபாய் 1,2,5,10, 20 க்கான சிறப்பு தலையிட்ட நாணயங்கள் வெளியிடப்பட்டன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.