மமதா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை; விபத்து தான் - தேர்தல் ஆணையம்

மமதா பானர்ஜி

கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 4 நாட்கள் கழித்து இன்று மமதா பானர்ஜி மீண்டும் வீடு திரும்பி தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

  • Share this:
மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை, அன்று நடந்தது விபத்து தான் என விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்குவங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த மார்ச் 10ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த முதல்வர் மமதா பானர்ஜி, வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு தொகுதியில் உள்ள கோவில்களில் அடுத்தடுத்து சுவாமி தரிசணம் செய்தார்.

அன்று மாலை புர்பா மெதினிபூர் எனும் பகுதியில் இருந்த கோவில் ஒன்றில் தரிசனம் முடிந்து காருக்கு மமதா பானர்ஜி திரும்பிக் கொண்டிருந்த போது தொண்டர்கள், பொதுமக்கள் என பெருமளவான கூட்டம் கூடியதாலும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதாலும் கார் அருகே சென்ற மமதா பானர்ஜியின் மீது கார் கதவு மூடியதால் அவருக்கு கால், கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக அன்று செய்தியாளர்களிடையே அதிர்ச்சி தோய்ந்த முகத்துடன் முதல்வர் மமதா பானர்ஜி பேசுகையில், 4 - 5 மர்ம நபர்கள் தன்னை தாக்கியதாகவும், தாக்குதல் நடந்த சமயத்தில் தன்னருகே காவலர்கள் யாரும் இல்லை என்றும், இது ஒரு சதிச் செயல் எனவும் காரில் இருந்தவாரே அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 4 நாட்கள் கழித்து இன்று மமதா பானர்ஜி மீண்டும் வீடு திரும்பி தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே மமதா மீதான தாக்குதல் தொடர்பாக காவல்துறையினரிடமும், மாநில தலைமைச் செயலாளரிடமும் விரிவான அறிக்கை அனுப்புமாறு தேர்தல் ஆணையம் கோரியது.. இதனடிப்படையில் தீவிர விசாரணைக்குப் பிறகு மமதா பானர்ஜிக்கு நடந்தது விபத்து தான் என்றும் அது தாக்குதல் அல்ல எனவும் தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்தது. இதன் மூலம் இந்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

முன்னதாக மேற்கு வங்க காவல்துறையும் இது விபத்து தான் தாக்குதல் அல்ல என முதல்கட்ட விசாரணையில் தெரிவித்திருந்தது. அதே போல தாக்குதல் நடைபெற்றதாக முதல் நாள் பேட்டியளித்த மமதா பானர்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது தாக்குதல் என்று கூறுவதற்கு பதிலாக அடிபட்டிருப்பதால் வலி ஏற்பட்டுள்ளது என்ற பாணியிலேயே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: