மோடி, நிதிஷ் குமார், ஜெகன் வரிசையில் மம்தா பானர்ஜி...!

பிரசாந்தின் பிரசார உத்திகள் மம்தாவுக்கு கைகொடுக்குமா? மேற்கு வங்கத்தில் அதிகரிக்கும் பாஜக செல்வாக்கு வெற்றியை தேடித்தருமா? என்பது 2021-ல் தெரியவரும்.

Lingam S Arunachalam | news18
Updated: June 7, 2019, 10:48 AM IST
மோடி, நிதிஷ் குமார், ஜெகன் வரிசையில் மம்தா பானர்ஜி...!
மோடி | நிதிஷ் | ஜெகன் | மம்தா
Lingam S Arunachalam | news18
Updated: June 7, 2019, 10:48 AM IST
மேற்கு வங்கத்தில் பாஜக எழுச்சியால் தனது அரசியல் ஆட்டம் கண்டுள்ளதை அறிந்து கொண்ட மம்தா பானர்ஜி தேர்தல் வியூக நிபுணராக இருக்கும் பிரசாந்த் கிஷோர் உடன் கைகோர்த்துள்ளார்.

வியூக நிபுணர்கள் என்று அழைக்கப்படும் ஸ்டாட்டர்ஜிஸ்ட்களின் கருத்துகள் தற்போது அனைத்து துறைகளிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

அமெரிக்க தேர்தலிலிருந்து உள்ளூர் தேர்தல் வரை இந்த ஸ்டாட்டர்ஜிஸ்ட்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.


இந்தியாவின் முக்கியமான தேர்தல் வியூக நிபுணராக கருதப்படுபவர் பிரசாந்த் கிஷோர். இவர் கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க பணியாற்றினார்.

மோடி


2014-ல் பாஜக பெற்ற பிரமாண்ட வெற்றியில் பிரச்சாந்தின் பங்கு முக்கியமானது. அதுவரை, குஜராத் கலவரத்தின் கறைகள் ஒட்டியிருந்த மோடியின் முகத்தை வேறு விதமாக நாட்டு மக்களுக்கு காட்டினார்.

Loading...

சமூக ஊடகங்கள், விளம்பரங்கள் என்று ‘மோடியே இந்தியாவின் மீட்பர்’ என்ற ரேஞ்சுக்கு வியூகங்கள் வகுக்கப்பட்டன. இது தேர்தலில் நல்ல பலனை தந்தது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் பாஜக 82 தொகுதிகளை வென்றது.

இதனை அடுத்து, பீகார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றிய பிரசாந்த் அங்கும் வெற்றியை தேடிக் கொடுத்தார்.

பிரசாந்த் கிஷோர்


யானைக்கும் அடிச்சறுக்கும் என்பது போல, 2017 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்காக பிரசாந்த் பணியாற்றினார். ஆனால், காங்கிரஸ் தோல்வியையே சந்தித்தது.

தேர்தல் சமயத்தில் பிரியங்கா காந்தியை காங்கிரசின் தலைவராக்க வேண்டும் என்று அவர் கூறியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் நல்ல நட்பு இருந்த நிலையில், திடீரென ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் அவர் இணைந்தார். அக்கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பியாக பிரசாந்த் தேர்வாகலாம் என்றும் பேச்சுகள் அடிபட்டன.

ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த பிரசாந்த் கிஷோர்


கட்சியில் இணைந்தாலும் அங்கு ஆக்டிவாக இல்லாமல், பிரசாந்த் தனது நிறுவனத்தை பொறுப்பாக நடத்திக்கொண்டு இருந்தார்.

நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்,எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, தங்களுக்காக பணியாற்றுமாறு கோரிக்கை விடுக்க, அதனை தட்டாமல் ஏற்றுக்கொண்ட பிரசாந்த் களத்தில் இறங்கி வெற்றியும் கண்டுள்ளார்.

மொத்தமுள்ள 175 இடங்களில் 151 இடங்களை ஜெகனின் கட்சி கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜெகனின் வெற்றிக்கு பிரசாந்தின் பிரசார வியூகம் மிக முக்கியமாக கருதப்படுகிறது.

ஜெகன்மோகன் ரெட்டி


இவ்வாறாக பிரசாந்தின் மவுசு அதிகரித்துக்கொண்டு இருக்க மேற்கு வங்க முதல்வரும் திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, அவரை தனக்கு உதவ அழைத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பாஜக திடீர் எழுச்சி பெற்று தனது அரசியலை ஆட்டம் காண வைத்துள்ளதால், 2021-ல் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக பிரசார உத்திகளை மாற்ற மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.

இதற்காக, பிரசாந்த் கிஷோர் உடன் மம்தா கைகோர்த்துள்ளார். பிரசாந்தின் பிரசார உத்திகள் மம்தாவுக்கு கைகொடுக்குமா?, மேற்கு வங்கத்தில் அதிகரிக்கும் பாஜகவின் செல்வாக்கு அக்கட்சிக்கு வெற்றியைத் தேடித்தருமா? என்பது 2021-ல் தெரியவரும்.

 

First published: June 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...