ஊசலாடும் முதல்வர் பதவி - உத்தவ் தாக்கரேவுக்கு உதவுவாரா மோடி?

தான் எம்.எல்.சியாவதில் இருக்கும் முட்டுக்கட்டையை அகற்றித்தருமாறு பிரதமர் மோடியிடம் உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வந்திருக்கின்றன.

ஊசலாடும் முதல்வர் பதவி - உத்தவ் தாக்கரேவுக்கு உதவுவாரா மோடி?
மோடி - உத்தவ் தாக்கரே
  • Share this:
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியைத் தக்கவைக்க பிரதமர் மோடியின் உதவியை நாடியிருப்பதாக வந்திருக்கும் செய்திகள் அந்த மாநில அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன.

2019 நவம்பரில் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரே, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஆறுமாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராகவோ, சட்ட மேலவை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். அதன்படி சட்ட மேலவை உறுப்பினராவதற்கான முயற்சிகளை எடுத்தார் உத்தவ் தாக்கரே. ஆனால் அதற்கான தேர்தல் நடப்பதற்குள் கொரோனா சிக்கல் வந்துவிடவே, தேர்தலை நடத்த முடியவில்லை.

மாற்று ஏற்பாடாக, மகாராஷ்டிரா ஆளுநரால் நியமிக்கப்படும் இரண்டு எம்.எல்.சி பதவிகளுள் ஒன்றுக்கு உத்தவ் தாக்கரே பெயரைப் பரிந்துரைத்தது மகாராஷ்டிரா அமைச்சரவை. அதை ஏற்று உத்தவ் தாக்கரேவை எவ்விதச் சிக்கலும் இன்றி எம்.எல்.சியாக நியமிப்பார் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி என்று எதிர்ப்பார்த்தார் தாக்கரே. ஆனால் அந்த இடத்தில்தான் அரசியல் சிக்கல் வெடித்தது.


ஆளுநர் மாளிகையிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்கவோ, நிராகரிக்கவோ செய்யாமல், அமைதி காக்கிறார் ஆளுநர் கோஷ்யாரி என்றும் அந்த அமைதிக்குப் பின்னால் பாஜகவின் பழிவாங்கும் அரசியல் இருப்பதாகக் குற்றம்சாட்டியது சிவசேனா.

பாஜகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த உத்தவ் தாக்கரே, தேர்தலுக்குப் பிறகு கூட்டணி மாறி ஆட்சியமைத்ததை அப்போது தடுக்கமுடியாத பாஜக, தற்போது அவர் முதலமைச்சர் பதவியில் தொடரத் தடை போடுகிறது என்பதுதான் சிவசேனாவின் குற்றச்சாட்டு.

அதன்பிறகும் ஆளுநரிடமிருந்து எந்தவொரு பதிலும் வராத நிலையில், உத்தவ் தாக்கரேவை எம்.எல்.சியாக நியமிக்கும்படி மீண்டும் ஒருமுறை ஆளுநருக்குப் பரிந்துரைத்தது மாநில அமைச்சரவை. அதற்கும் ஆளுநர் கோஷ்யாரி பதிலளிக்காத நிலையில்தான், பிரதமர் மோடியின் உதவியை உத்தவ் நாடியிருப்பதாகத் தற்போது செய்திகள் வந்திருக்கின்றன.தற்போதைய நெருக்கடியான சூழலில் மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாவது நல்லதல்ல என்றும், தான் எம்.எல்.சியாவதில் இருக்கும் முட்டுக்கட்டையை அகற்றித்தருமாறு பிரதமர் மோடியிடம் உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வந்திருக்கின்றன.

உத்தவ் தாக்கரேவுக்கு உதவிக்கரம் நீட்டி ஊசலாட்டத்தை நிறுத்துவாரா பிரதமர்? உத்தவ் முதல்வராகத் தொடர்வதற்குத் தடையாக இருக்கும் முட்டுக்கட்டையை அப்புறப்படுத்துவாரா மோடி?

பரபரப்புடன் காத்திருக்கிறது மகாராஷ்டிரா அரசியல் களம்.
First published: April 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading