2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு 5 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சமாக உயர்த்தப்படும்; சிறு சேமிப்புத் திட்டத்தின் கீழ், 7.5% வட்டி விகிதத்தில் மகளிருக்கான சேமிப்பு பத்திரங்கள் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த பட்ஜெட் பற்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் என்று பாராட்டியுள்ளார். வரவிருக்கும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களை கருத்தில் கொண்டு மோடி அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். ஏழை மக்களுக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏழைகள், சாமானியர்கள் என அனைவருக்கும் பலனளிக்காத பட்ஜெட் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட் என்று கூறியுள்ளார்.
வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு உயர்வு, சிகரெட் மீதான கூடுதல் வரி உள்ளிட்டவை மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடாந்திர பட்ஜெட், வெறும் சடங்காக இல்லாமல், அறிவிப்பு பட்ஜெட் ஆக்கப்பூர்வமான பட்ஜெட்டாக அமைய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பெண் குடியரசுத் தலைவர் உரையாற்ற, மற்றொரு பெண் நிதியமைச்சர் மத்திய பட்ஜெட்டை முதன்முறையாக தாக்கல் செய்கிறார் என்ற பெருமையுடன் வெளியிடப்பட்ட இன்றைய மத்திய பட்ஜெட் 2023 - இல் வரவேற்கத்தக்க அம்சங்களும், சில எதிர்பார்த்த அறிவிப்புகளின்றி ஏமாற்றமும் அளிப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.