ப.சிதம்பரத்தின் அரசியல் எழுச்சியும், கடந்து வந்த பாதையும்!

2-வது முறையாக மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றது முதல் சிதம்பரம் மீதான பல வழக்குகளில் நடவடிக்கைகள் வேகம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரத்தின் அரசியல் எழுச்சியும், கடந்து வந்த பாதையும்!
ப. சிதம்பரம் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: August 22, 2019, 8:10 AM IST
  • Share this:
தொழில் முறை வழக்கறிஞரான சிதம்பரம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 

டெல்லி அரசியலில் கால்பதித்து அதிகபட்ச உயரம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த மிகச் சிலரில் ப.சிதம்பரம் முதன்மையானவர். சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்த சிதம்பரம், கல்வி வளர்ச்சி மற்றும் தமிழ் இசைக்கு அளப்பறிய சேவைகளை புரிந்த ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் மகள் வழிப் பேரனாவார்.

சென்னை லயோலா கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், சென்னை சட்டக்கல்லூரி ஆகியவற்றில் பயின்ற சிதம்பரம் தொழில்முறை வழக்குரைஞர். அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பயின்றவர்.


1972-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக 3 ஆண்டுகள் பதவி வகித்தவர். 1984-ல் முதல் முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிதம்பரம் ராஜீவ் காந்தி பிரதமரான போது வணிகத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.

ஆனால் அவர் முதல் முதலில் கேபினட் அமைச்சராக ஆனது, காங்கிரசுக்கு எதிராக 1996-ல் தேவகவுடா தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கிய முன்னணி அரசில்தான்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று நரசிம்மராவ் பிரதமரானார். தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்த அதிமுக வென்று ஜெயலலிதா முதலமைச்சரானார்.1996 பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்ததால் மூப்பனார் தலைமையில் பெருமளவு காங்கிரஸார் பிரிந்துவந்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினர். அந்தக் கட்சியில் மூப்பனாருக்கு அடுத்தபடியாக முக்கியத் தலைவரானார் சிதம்பரம். இது அவரது அரசியல் வாழ்வில் மிக முக்கியத் திருப்பு முனை.

தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்பட்ட உடனேயே திமுகவுடன் இணைந்து போட்டியிட்டு தமிழகத்தில் அமோகமாக வெற்றி பெற்றது அக்கட்சி. அதே நேரம், பல கட்சிகள் ஒன்றாக இணைந்து ஐக்கிய முன்னணி என்ற பெயரில் தேவகவுடா தலைமையில் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. அந்த அரசில்தான் சிதம்பரம் முதல் முறையாக கேபினட் அமைச்சராகி நிதித்துறைக்குப் பொறுப்பேற்றார்.

அதிமுக கூட்டணியை எதிர்த்து தொடங்கப்பட்ட தமிழ் மாநிலக் காங்கிரஸ் 2001-ல் அதிமுக-வுடனே கூட்டணி வைத்தபோது அதை எதிர்த்து காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார் சிதம்பரம். ஓராண்டுக்கு பின் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார். 2004 மக்களவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தமிழகம் மற்றும் புதுவையில் 40 இடங்களையும் வென்றது.

மன்மோகன் சிங் தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அதில் சிதம்பரம் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். அதுமுதல் 2014- ஆம் ஆண்டு வரை தொடர்ந்து கேபினட் அமைச்சராக நிதித்துறையையும் உள்துறையையும் கவனித்து வந்தார்.

அதுமட்டுமல்லாமல் 9 அதிகாரம் பெற்ற அமைச்சரவைக் குழுக்களிலும் இடம் பெற்றிருந்தார். பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு அடுத்தபடியாக ஆட்சியில் அதிக அதிகாரம் உள்ளவர்களில் ஒருவராகவும் சிதம்பரம் திகழ்ந்தார். இந்த 10 ஆண்டுகள் அவரது அரசியல் வாழ்வு உச்சத்தை எட்டிய காலம். அதே நேரத்தில் அரசியல் வாழ்க்கையை ஆட்டிப் பார்க்கும் பல சர்ச்சைகளும் எழுந்தன.

சிறந்த மேடைப் பேச்சாளர், வழக்கறிஞர், நிர்வாகி, பொருளாதார வல்லுநர் என்று பல முகங்கள் உடையவரான சிதம்பரம், பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக துல்லியமான புள்ளிவிவரங்களோடு விமர்சித்து வந்தார்.

மீண்டும் 2-வது முறையாக மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றது முதல் சிதம்பரம் மீதான பல வழக்குகளில் நடவடிக்கைகள் வேகம் பெறுகின்றன. இந்த வழக்குகளின் போக்கு தான் சிதம்பரத்தின் அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

மேலும் படிக்க... சிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை!
First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading