கேரளா காவல்துறை வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டபோது, பாதுகாப்புக்காக பம்பைக்கு வந்த போலீஸ் வேன் ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த மதம் சார்ந்த சின்னம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என கேள்வி எழுந்துள்ளது.
அந்த போலீஸ் வேனில், பிறையும் நட்சத்திரமும் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. காவல் துறை வாகனங்களில் இது போன்ற எந்த மத அரசியல் சார்ந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது என்ற விதிமுறைகள் உள்ளது.
எனினும், காவல்துறை வேனில் மத அடையாளம் கொண்ட சின்னம் இருந்ததை பார்த்த சபரிமலைக்கு வந்த பக்தர் அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, கருநாகப்பள்ளியை சேர்ந்த ஜெயக்குமார் நெடும்பறத் என்ற அந்த பக்தர் அந்த காட்சிகளை தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், சபரிமலை போன்ற முக்கிய மத வழிபாட்டுத் தலத்தில் இதுபோன்ற மதம் சார்ந்த அடையாளத்துடன் போலீஸ் வாகனம் வந்ததில் சதி திட்டம் உள்ளதா எனவும் இதன் பின்னணியில் காவல்துறை அதிகாரிகள் யாரேனும் உள்ளனரா அல்லது வெளி நபர்கள் யாரேனும் இதை செய்திருக்கின்றனறா என மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் வாகனங்கள் அனுமதிக்கப்படும் போது, 'போலீஸ்' என்ற அதிகாரப்பூர்வ அடையாளத்தைத் தவிர வேறு எந்த அடையாளமும் கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி கேரள மாநிலத்தில் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.