திருப்பதி மலையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி முனிராமையா. அவருடைய நண்பர்களான ஜெயப்பிரதாப் மற்றும் கேவி ராஜு ஆகியோர் இணைந்து டிரேட் பிராப்பிட் பண்ட் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை துவக்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஹைதராபாதில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் சந்துரு சுனில்குமார் என்பவரை அணுகி முனி ராமையாவின் நண்பர்களில் ஒருவரான ஜெய பிரதாப் எங்களுடைய நிறுவனம் மூலம் நீங்கள் பங்குசந்தையில் முதலீடு செய்தால் பதினைந்தே நாட்களில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று கூறினார்.
ஆனால் சுனில் குமார் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமலை காவல் கூடுதல் கண்காணிப்பாளர் முனி ராமையாவை அழைத்து கொண்டு ஐதராபாத்தில் உள்ள மெகதிபட்டினத்தில் இருக்கும் சுனில்குமார் அலுவலகத்திற்கு சென்ற ஜெயபிரதாப் மீண்டும் தங்கள் நிறுவனம் மூலம் முதலீடு செய்யுங்கள் என்று சுனில் குமாரை வற்புறுத்தினார்.
அப்போது சுனில் குமார் பணம் திரும்ப கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கூடுதல் கண்காணிப்பாளர் முனிராமையா தன்னுடைய நண்பரான கே.வி. ராஜூ என்பவரை அங்கு வரவழைத்தார். நான் இதற்கு முன்னர் திருப்பதியில் சிஐடி பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றினேன். அதிரடிப்படை டிஎஸ்பி ஆக வேலை செய்யும் ராஜு என்னுடைய நண்பர்.
எங்களிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பி கொடுக்காவிட்டால் அவர்களிடம் வசூல் செய்யும் முறை எங்களுக்கு தெரியும். எனவே நீங்கள் இரண்டு கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்யுங்கள் என்று முனி ராமையா சுனில்குமாரை வற்புறுத்தியிருக்கிறார்.
மேலும் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன் என்று கூறி தன்னுடைய மொபைல் போன் மூலம் ஆர்டிஜிஎஸ் பார்ம் ஒன்றை தயார் செய்து அதனை சுனில்குமாருக்கு அனுப்பி வைத்தார். இதனால் நம்பிக்கை அடைந்த சுனில் குமார் 1.20 கோடி ரூபாய் பணத்தை மூன்று பேரிடமும் தன்னுடைய அலுவலகத்தில் வைத்து கொடுத்திருக்கிறார்.
அதன் பின்னர் ஜெயபிரதாப், கே.வி.ராஜு ஆகியோரை சுனில் குமார் பலமுறை முயன்றும் தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே தன்னுடைய பணத்திற்கு உத்தரவாதம் கொடுத்த காவல் கூடுதல் கண்காணிப்பாளர் முனி ராமையாவை தொடர்புகொண்டு இதுபற்றி பேசி இருக்கிறார். அப்போது முனிராமையா, நாங்கள் மூன்று பேரும் போலீஸ் அதிகாரிகள். கூடுதலாக எங்களுக்கு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் உள்ளது என்று மறைமுகமாக சுனில் குமாருக்கு மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. .
உங்களுடைய பணம் உங்களுக்கு கிடைக்கும். என்னுடைய மகளின் பெயரில் இருக்கும் நிலத்தை விற்றாவது உங்கள் பணத்தை திருப்பி கொடுக்கிறேன் என்று முனிராமையா சுனில் குமாரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அதன் பின்னர் சுனில்குமார், முனிராமையாவை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இதனால் சந்தேகமடைந்த சுனில்குமார் நடந்த சம்பவங்களை விவரித்து ஹைதராபாத் குற்ற தடுப்பு காவல் பிரிவில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த ஹைதராபாத் குற்றத் தடுப்பு காவல் பிரிவினர் இதில் பண மோசடி நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து இந்த மோசடி தொடர்பாக அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எனவே திருமலை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனி ராமையாவுக்கு விளக்கம் கேட்டு ஹைதராபாத் குற்றப்பிரிவு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மீண்டும் ஒரு முறை அவருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பற்றி தெலுங்கானா போலீசார் ஆந்திர போலீஸ் துறைக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.
காவல் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றும் ஒருவரே பண மோசடியில் ஈடுபட்டிருப்பது ஆந்திர காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபற்றி துறை ரீதியான நடவடிக்கை மற்றும் விசாரணை ஆகியவற்றிற்கு ஆந்திர போலீஸ் துறை தயாராகி வருகிறது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உட்பட மூன்று பேர் கூட்டு சேர்ந்து ஏற்படுத்தியதாக கூறப்படும் அந்த நிறுவனத்தில் மேலும் பலர் முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரும் தங்களை போலீஸ் அதிகாரிகள் என்று கூறி கொண்டதால் ஏமாந்தவர்கள் புகார் அளிக்காமல் இருந்து வருகின்றனர்.
தகராறில் ஈடுபட்ட மனைவியை கட்டிடத்தின் 4வது மாடி லிப்ட் குழாய் வழியாக தள்ளிவிட்ட கணவர்!
தற்போது இந்த விவகாரம் வெட்டவெளிச்சமாகி போலீஸ் துறையினர் முனிராமையா மீது வழக்கு, துறைரீதியான நடவடிக்கை என்ற நிலைக்கு வந்துவிட்டதால் இவர்களால் ஏமாற்றப்பட்ட மேலும் பலர் இது பற்றி புகார் அளிக்க கூடும் என்று கருதப்படுகிறது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்களில் ஜெயப்பிரதாப், கேவி ராஜு ஆகியோர் போலீஸ் அதிகாரிகளே கிடையாது என்பது குறிப்பிடதக்கது.
ஒரு போலீஸ் உயரதிகாரியுடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு மோசடி பேர்வழிகள் தங்களையும் போலீஸ் அதிகாரிகள் என்று கூறி கொண்டது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் முனிராமையாவை பணியிட மாற்றம் செய்த ஆந்திர காவல்துறை அவர் உடனடியாக விஜயவாடாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் முனிராமையாவுடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்ட போலி போலீஸ் அதிகாரிகள் ஜெயப்பிரதாப், கேவி ராஜு ஆகியோர் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தை அடையாளம் காணும் பணியில் ஆந்திர போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.