காதலனுடன் சேர்ந்து கணவனை லாரி ஏற்றி கொன்ற மனைவி கைது..!

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட, லாரி, கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

காதலனுடன் சேர்ந்து கணவனை லாரி ஏற்றி கொன்ற மனைவி கைது..!
மாதிரி படம்
  • Share this:
ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி, காதலனுடன் சேர்ந்து கணவனை லாரி ஏற்றிக் கொன்றுவிட்டு, விபத்து என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திரா சித்தூர் மாவட்டம் மதப்பள்ளியில் ரேணுகாதேவி-பாலசுப்ரமணியம் தம்பதியினர் வசித்துவந்தனர். 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சித்தூரில் தனது புத்தக விற்பனை தொழில், சரிவர ஓடாததால், திருப்பதியில் ட்ராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கிய பாலசுப்ரமணியம் அங்கு தனியாக வசித்துவந்தார்.

கணவர் இல்லாத சமயத்தில், உள்ளூரில் செயல்பட்டுவந்த சமூக சேவை நிறுவனத்தில் ரேணுகாதேவி உறுப்பினரானார். அந்த அமைப்பின் தலைவராக இருந்த நாகிரெட்டி என்பவருடன், ரேணுகா தேவிக்கு ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.


கணவன் இல்லை என்ற நிலை மாறியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு, சொந்த ஊரிலேயே பாலசுப்ரமணியம் ட்ராவல்ஸ் நிறுவனத்தை தொடங்க, தம்பதியிடையே அவ்வப்போது மோதல் வெடித்துள்ளது.

ஊர் திரும்பிய கணவன், காதலுக்கு தொல்லையாக இருந்ததால், அவரைக் கொலை செய்ய கடந்த 2 மாதங்களாக திட்டமிட்டுவந்திருக்கிறார் ரேணுகாதேவி. இந்த நிலையில்தான், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சாலையில் ஆள்நடமாட்டம் இருக்காது என்பதால், கணவனைத் தீர்த்துக்கட்ட இதுதான் சரியான தருணம் என்ற முடிவில், காதலன் நாகிரெட்டியுடன் கொலை திட்டத்தை வகுத்தார் ரேணுகாதேவி.திட்டமிட்டபடி, கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் உடல்நிலை சரியில்லை எனச்சொல்லி கணவன் பாலசுப்ரமணியத்தை மருந்து வாங்க அனுப்பியுள்ளர். பைக்கில் சென்ற பாலசுப்ரமணியம், சாலையில் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாலசுப்ரமணியத்தின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விபத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். கணவன் மரணத்தின் போது அவரது மனைவி எந்த கவலையும் இன்றி சிரித்துக்கொண்டிருந்ததை போலீசார் கவனிக்கத்தவறவில்லை.

மனைவி ரேணுகாதேவியின் செல்ஃபோன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தபோது, விபத்து நடந்த சமயத்தில் காதலர் நாகிரெட்டி, லாரி ஓட்டுநர் ஆகியோரிடம் பேசியது உறுதியானது.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை பிடித்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் மொத்த பின்னணியும் அம்பலமானது. விசாரணையில், மனைவி ரேணுகாதேவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து தனக்கு பணம் கொடுத்து அவரது கணவரை கொலை செய்யச்சொன்னதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, ரேணுகாதேவி, நாகிரெட்டியை கைது செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட, லாரி, கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...
First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading