பீகாரில் விவசாயிகள் நடத்திய பேரணியில் காவல்துறையினர் தடியடி: பலர் படுகாயம்

காவல்துறையினர் தடியடி

3 வேளாண் சீர்திருத்த சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பீகார் தலைநகர் பாட்னாவில் இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் இணைந்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர்.

 • Share this:
  மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், 3 வேளாண் சீர்திருத்த சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் இணைந்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர்.

  அப்போது, அவர்கள் அனுமதிக்கப்பட்ட வழிப்பாதைக்கு பதிலாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த வேறுபாதையில் சென்றதாகக் கூறப்படுகின்றது. அப்போது, ஆளுநர் மாளிகைக்கு பேரணியாகச் செல்ல அனுமதி இல்லை என்றும், அனைவரும் கலைந்து செல்லுமாறும் காவல்துறையினர் கூறினர்.

  எனினும், பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள் அதனை ஏற்க மறுத்ததால் காவல்துறையினர் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதில் பல விவசாயிகள் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்நிலையில், விவசாயிகளுடன் இதற்கு முன்னர் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், மீண்டும் இன்று பேச்சு வார்த்தைக்கு வருமாறு போராடும் விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: