முகப்பு /செய்தி /இந்தியா / 2023க்குள் 10 லட்சம் வேலைகள்.. இலக்கை அடைய 5 அம்ச வழிகள் வகுத்த பிரதமர் அலுவலகம்!

2023க்குள் 10 லட்சம் வேலைகள்.. இலக்கை அடைய 5 அம்ச வழிகள் வகுத்த பிரதமர் அலுவலகம்!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அடுத்தாண்டு இறுதிக்குள் 10 லட்சம் வேலைகள் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த பிரதமர் அலுவகம் ஐந்து 5 அம்ச திட்ட வழிகளை உருவாக்கியுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஸ்கார் மேளா' எனப்படும் மாபெரும் வேலைவாய்ப்பு திட்டத்தை கடந்த அக்டோபர் 22ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த புதிய திட்டத்தின்படி நாடு முழுவதிலும் இருந்து தேர்வாகும் நபர்கள், 38 மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிகளில் சேருவார்கள். இந்த வேலைவாய்ப்பு இயக்கத்தில் யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போன்றவை மூலம் தேர்வுகள் நடத்தி ஆட்சேர்ப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வரும் 2023 மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்பு என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக அக்டோபர் 22ஆம் தேதி 75,000 பேருக்கு வேலை வழங்கிய பிரதமர் மோடி, 10 லட்சம் வேலை என்ற இலக்கை அடைய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். நியூஸ் 18க்கு கிடைத்த பிரத்தியேக தகவலின் படி 5 அம்ச வழிகள் வகுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அனைத்து துறைகளும் செயல்பட ஐந்து அம்ச திட்டங்களின் கீழ் செயல்பட உள்ளன.

முதலாவதாக அனைத்து அமைச்சகங்கள், துறைகளில் உள்ள காலியிட விவரங்களை ஒரு பொதுதளத்தில் கொண்டுவந்து அறிந்து கொள்ள Vacancy Status Portal என்ற போர்ட்டல் உருவாக்கப்படவுள்ளது. இரண்டாவதாக இதில் தொடர்ச்சியாகத் தரவுகளை அப்டேட் செய்து கண்காணிக்க அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காலியிட நிலவரத்தை கண்காணித்து பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை தருவார்.

மூன்றாவதாக, 2023க்குள் இலக்கை முறையாக முடித்து வைக்க இரு மாதத்திற்கு ஒரு முறை டார்க்கெட் வைத்து அனைத்து அமைச்சகங்களும் பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளன. நான்காவதாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முடிந்தவுடன் பணி நியமனத்திற்கு தாமதம் ஏற்படாத வகையில் டிஜிட்டல் உடனுக்குடன் சரிபார்ப்பு நடந்து நியமன ஆணையை வழங்க பிரத்யேக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் செயல்பாடுகளை இவர்கள் பிரதமர் அலுவலகத்திற்கு மாதம்தோறும் தெரிவிக்க வேண்டும். இதற்கு கேபினெட் செயலாளர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'பலபேர் என்னைய திட்டிட்டே இருக்காங்க... தினமும் 2-3 கிலோ வசைகளை சாப்பிடுகிறேன்'' கிண்டலடித்த பிரதமர் மோடி!

ஐந்தாவதாக 2023-24 ஆண்டு காலத்தில் ஓய்வு பெறுவோர் காரணமாக ஏற்படும் காலியிடங்கள் குறித்த தரவுகளை வழங்க அமைச்சகங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த காலியிடங்களை உடனடியாக நிரப்ப இந்த திட்டத்தையும் இணைத்து செயல்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி, நாட்டில் மொத்தம் சுமார் 40.35 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் உள்ளன. இதில் சுமார் 10 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. ரயில்வேயில் 2.94 லட்சம் இடங்களும், பாதுகாப்பு துறையில் 2.64 லட்சம் இடங்களும், உள்துறையில் 1.4 லட்சம் இடங்களும், அஞ்சல் துறையில் 90,000 இடங்களும், வருவாய்த்துறையில் 80,000 இடங்களும் காலியாக உள்ளன.

First published:

Tags: Jobs, PM Modi, PMO office