இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வீசக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. கடந்த டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து, இதுவரை கொரோனா பாதிப்பு 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் மொத்த பாதிப்பில் 85 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்பட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி எந்த அளவுக்கு செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்தும், தடுப்பூசி நடைமுறையை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.