புதிய மசூதி கட்ட அயோத்தியில் இருந்து 30 கி.மீ தொலைவில் இடம் ஒதுக்கீடு

மசூதிக்கு ஒதுக்கப்பட்ட இடம்

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி நகரமே வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது.

 • Share this:
  அயோத்தியில் பிரமாண்டமாக அமைய உள்ள ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்கள் மாற்று இடத்தில் மசூதி கட்டிக்கொள்வதற்காக 5 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

  இதையடுத்து மசூதி கட்டுவதற்காக இந்தோ - இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை என்ற அமைப்பு அண்மையில் உருவாக்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகளும், சன்னி வக்பு வாரியத்தினரும் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து 5 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். அதனடிப்படையில் மசூதி கட்டுவதற்கான 5 ஏக்கர் நிலத்தை, அயோத்தி மாவட்ட ஆட்சியர் அனூஜ் குமார் ஜா ஒப்படைத்தார்.

  அதனையடுத்து, ஃபரிசாபாத்தில் உள்ள தன்னிபூர் (Dhannipur) கிராமத்தில் புதிய மசூதி அமைய உள்ளது. மசூதிக்கான நிலம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அறக்கட்டளை நிர்வாகிகள் விரைவில் கூடி அடுத்தகட்ட பணிகள் குறித்து திட்டமிட உள்ளனர்.

  அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான ராம ராஜ்யம் விரைவில் அமையும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். ராமர் கோவில் குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அனைவரும் தங்கள் வீடுகளில் வரும் 4 மற்றும் 5 தேதிகளில் விளக்கேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  அயோத்தியில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்பாக பிரதமர் வழிபாடு நடத்த உள்ள அனுமார் கர்ஹி கோயிலில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த அயோத்தி மாவட்டமே விழாக்கோலம் பூண்டு வருகின்றது. அயோத்தி ரயில் நிலையம் வண்ணம் பூசப்பட்டு, அழகிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

  அயோத்திக்கு சென்ற உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அடிக்கல் நாட்டு விழாவுக்கான பணிகளை ஆய்வு செய்தார். சரயு நதிக்கரையில் சிறப்பு ஆரத்தி எடுக்கும் இடங்களையும் அவர் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார். முதலமைச்சர் வருகையை ஒட்டி பூக்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

  ஹனுமன் கர்ஹி என்ற இடத்தில் வழிபாடு செய்த யோகி ஆதித்யநாத், ராம் கி பவ்டி என்ற இடத்தில் நீர்நிலைகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள இடங்களில் செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனைகளை தெரிவித்தார்.

  மேலும் படிக்க....தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

  இதனிடையே, ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஏற்கனவே நாட்டப்பட்டு விட்டதாகவும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டினார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: