அபிநந்தன் என்ற பெயருக்கே புதிய அர்த்தம் கிடைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய தொழில்நுட்ப கட்டுமான கண்காட்சி டெல்லியில் நடைபெற்றது. கண்காட்சியை தொடக்கிவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை வரவேற்று பல்வேறு விதமான பெயர்களில் அழைக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இதனால் தேசத்தில் அபிநந்தன் என்ற பெயருக்கே புதிய அர்த்தம் கிடைத்துள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார்.
அபிநந்தனின் அற்புதமான வீரத்தால், நாடே பெருமைகொள்வதாகவும், 130 கோடி இந்தியர்களை ஊக்குவிக்கும் வகையில் நமது பாதுகாப்புப் படைகள் திகழ்வதாகவும், இந்தியாவின் நடவடிக்கைகளை உலகமே கவனிப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு 2 கட்டங்களாக உடல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. முதல் சோதனையாக, அபிநந்தனின் உடலில் ஏதேனும் கண்காணிப்பு சிப் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய முழு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து, அபிநந்தன் உடலில் உள்ள காயங்கள், விமானத்தில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்டவையா அல்லது பாகிஸ்தான் ராணுவத்தினரால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது பற்றி ஆராயப்படும்.
விமானத்தில் இருந்து கீழே குதித்ததால் ஏற்பட்ட மன பாதிப்பு குறித்தும், பாகிஸ்தான் ராணுவத்திடம் என்ன மாதிரியான தகவல்களை அபிநந்தன் கூறியிருக்கிறார் என்பது பற்றியும் சோதிக்கப்படும்.
இந்த சோதனைகள் அனைத்தும், இந்திய விமானப்படை உளவுத்துறை பிரிவு கண்காணிப்பில் நடைபெற உள்ளது.
Also see...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.