கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் கலைஞர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் 72-வது குடியரசு தினம் வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெறுகிறது. குடியரசு தின அணிவகுப்பில் தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப் பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் கலைஞர்களும் பங்கேற்கின்றனர். அணிவகுப்பில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் கலைஞர்கள், தங்களது சாகசங்களை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜனநாயகத்துக்கு தலை வணங்கும் வகையில், குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுவதாக குறிப்பிட்டார். அணிவகுப்பில் பங்கேற்கும் கலைஞர்களும், வீரர்களும் கொரோனா தடுப்பூசி குறித்த உண்மையான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், தவறான தகவல்களையும், வதந்திகளையும் நாம் தோற்கடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.