உத்தரபிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநில தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் திறந்த வெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்றார்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில், உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
இந்த சூழலில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். அகமதாபாத் விமானநிலையத்தில் வந்திறங்கிய மோடியை, அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் வரவேற்றார்.
Also read... தென் கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், பிரதமர் மோடி ஊர்வலமாக சென்றார். நான்கு மாநில தேர்தல் வெற்றியை அடுத்து வருகை புரிந்த பிரதமருக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது பிரதமர் மோடி மக்களை நோக்கி வெற்றிச்சின்னத்தை காட்டினார்.
பிரதமர் செல்லும் சாலையின் இருபுறமும் குவிந்த தொண்டர்கள், ஜெய் ஸ்ரீ ராம், மோடி மோடி என முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து காந்திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு மோடி சென்றார். நடப்பாண்டு இறுதியில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், ஆட்சியை தக்கவைப்பது குறித்து அம்மாநில முதலமைச்சர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, காந்திநகர் பகுதியில் உள்ள இல்லத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தமது தாய் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் தாயுடன் அமர்ந்து அவர் உணவு சாப்பிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.