புத்தர் பிறந்த புத்த பூர்ணிமான தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி நேபாள நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள புத்தர் பிறந்த இடமாக கருதப்படும் லும்பினிக்கு சென்ற பிரதமர் மோடி புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்கிறார்.
2020ஆம் ஆண்டு இந்தியா - நேபாளம் நாடுகளுக்கு இடையே எல்லை தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், இந்த சம்பவத்திற்குப் பின் பிரதமர் மோடி நேபாளம் செல்வது இதுவே முதல்முறை ஆகும். எல்லை சர்ச்சை நிகழ்ந்த போது அந்நாட்டின் பிரதமராக கே பி ஒலி இருந்த நிலையில், அந்நாட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் காரணமாக கே பி ஒலி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஷேர் பஹதூர் தியுபா பிரதமராக பொறுப்பேற்றார்.
இன்று நேபாளம் சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையம் சென்று வரவேற்பு தந்தார் பிரதமர் ஷேர் பகதூர். பின்னர் இரு தலைவர்களும் நேபாளத்தில் உள்ள மாயா தேவி கோயிலில் வழிபட்டனர். பின்னர் புத்தர் பிறந்த இடமான லும்பினி சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள போதி மரத்திற்கு நீர் ஊற்றினார். பின்னர் அங்குள்ள அசோகர் தூண் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி விளக்கு ஏற்றினார்.
2014ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து பிரதமர் மோடி, நேபாளத்திற்கு ஐந்தாவது முறையாக தற்போது செல்கிறார். ஆனால், 2019ஆம் ஆண்டுக்குப்பின் பிரதமர் மோடி நேபாளம் செல்வது இதுவே முதல் முறை.
இதையும் படிங்க:
ரஷ்ய அதிபர் புடின் ரத்த புற்றுநோயால் பாதிப்பு? ஆட்சி கவிழ்ப்புக்கும் திட்டம் என தகவல்
இந்த நான்கு நாள் பயணத்தில் இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நேபாளத்தில் புதிய புத்த கலாச்சராம் மற்றும் பண்பாட்டு மையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.