Home /News /national /

அல்லுரி சீதாராம ராஜூ சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி - கறுப்பு பலூன் பறக்கவிட்ட காங்கிரஸார் கைது

அல்லுரி சீதாராம ராஜூ சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி - கறுப்பு பலூன் பறக்கவிட்ட காங்கிரஸார் கைது

ஆந்திராவில் அல்லுரி சீதாராம ராஜூ சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஆந்திராவில் அல்லுரி சீதாராம ராஜூ சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பழங்குடி மக்களுக்கு தரமான கல்வியை வழங்க நாடு முழுவதும் 750 ஏகலயவா பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் பீமாவரத்தில் விடுதலைப் போராட்ட வீரரான அல்லுரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கலச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அல்லுரி சீதாராம ராஜூவின் 125ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, நாட்டின் சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இரண்டையும் ஒருங்கிணைத்து பிரதமர் மோடி இந்த சில திறப்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.

    சிலையை திறந்து வைத்து அங்கிருந்த மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி பேசுகையில், "தெலுங்கு மக்களின் யுக புருஷனாக கருதப்படும் அல்லுரி சீதாராம ராஜூ ஒட்டுமொத்த நாட்டிற்கும் உந்து சக்தி எனக் கூறியுள்ளார். பழங்குடி இன மக்களின் வீரம் மற்றும் தைரியத்திற்கு இவர் ஒரு அடையாளம். இவரின் கனவை சுமந்து செல்லும் நமது அரசு புதிய இந்தியாவை வடிவமைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

    பழங்குடி இன மக்கள், அம்மக்கள் வாழும் பகுதிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பழங்குடி மக்களுக்கு தரமான கல்வியை வழங்க நாடு முழுவதும் 750 ஏகலயவா பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அல்லுரி சீதாராம ராஜூ பெயரில் புதிய அருங்காட்சியகம் லம்பஸ்சிங்கி பகுதியில் தொடங்கப்படும். மேலும், பழங்குடி ஆராய்ச்சி மையம் ஒன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கப்படும்." இவ்வாறு பிரதமர் பேசினார்.

    இதையும் படிங்க: பாஜக கூட்டத்தை உளவு பார்க்க சென்ற தெலங்கானா அதிகாரி சிக்கினார்

    முன்னதாக ஆந்திரப் பிரதேசம் வந்த பிரதமர் மோடியை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி விமான நிலையத்தில் வரவேற்றார்.இந்த சிலை திறப்பு விழாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல நடிகருமான சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதற்கிடையில் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் தொண்டர்கள் கறுப்பு பலூனை பறக்கவிட்டுள்ளனர்.


    இந்த கறுப்பு பலூன்கள் பிரதமரின் ஹெலிகாப்டரின் அருகே சென்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், இந்த செயலில் ஈடுபட்ட மூன்று காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Andhra Pradesh, PM Modi

    அடுத்த செய்தி