ஃபோனி புயல் தாக்கிய ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று பயணம் செய்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனிடையே, புயலுக்கு பின் பிரதமர் மோடி தன்னை தொடர்பு கொள்ளவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிக அதிதீவிர புயலான ஃபோனி, ஒடிசாவில் புரி அருகே வெள்ளிக்கிழமை காலையில் கரையைக் கடந்தது. ஒடிசாவில் ஏப்ரல் மாதத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிதீவிர புயல் தாக்கியது.
புயல் கரையைக் கடந்தபோது, கனமழையுடன் மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. வீடுகள், கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன.

முதல்வர் நவீன் பட்நாயக்
ஒடிசாவின் புரி மற்றும் புவனேஸ்வர் நகரங்களில் ஃபோனி புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. ஒடிசாவில் புயலால் வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
விவசாயம், தோட்டக்கலை பயிர்கள், கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணப் பணிகள் முழுமையாக முடிந்த பின்பு, மரம் நடும் பணிகள் தொடங்கப்படும் என நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
மேலும், நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு 15 நாட்களுக்கு உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் புயல் தாக்கிய பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. புவனேஸ்வரில் பேருந்து, விமானம், ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் கப்பல் படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா ஆகிய பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

முதலமைச்சர் பழனிச்சாமி
பிரதமர் மோடி இன்று ஒடிசாவில் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஒடிசாவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தலா 10 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளனர்.

யோகி ஆதித்யநாத்.
இதனிடையே, மேற்குவங்கத்தில் பாதிப்புகள் அதிகளவில் இல்லை என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதே சமயம், நிவாரணப் பணிகள் குறித்து ஒடிசா முதல்வர் மற்றும் மேற்குவங்க ஆளுநருடன் பேசிய பிரதமர் மோடி, தன்னுடன் பேச மறுப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், இருமுறை முதல்வர் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட போதும், மம்தா பானர்ஜி அங்கில்லை என தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
சனிக்கிழமை மேற்குவங்கத்தை கடந்த ஃபோனி புயல் வங்கதேசத்திற்கு சென்றபோது வலு குறைந்தது. இருப்பினும், வங்கதேசத்தில் கனமழை மற்றும் சூறைக் காற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று நண்பகலுக்கு பின் மழை படிப்படியாக குறையும் என வங்கதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தாக்கத்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம் , அஸ்ஸாம், மணிப்பூர், மீசோரம், நாகாலாந்து, திரிபுரா,மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also see... நீட் தேர்வெழுதும் முன் மாணவ, மாணவிகளின் வேதனை மெட்டல் ஜிப் பேண்டடுக்கு தடை
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.