தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் சர்வதேச தொழில்நுட்பங்களுடன் கூடிய வீடுகள் கட்டும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் ஒருபகுதியாக தமிழகம், குஜராத், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் "கலங்கரை திட்டம்" என்ற பெயரில் சர்வதேச தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வீடுகள் கட்டும் திட்டத்திற்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் சென்னை பெரும்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 152 வீடுகள் கட்டுவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். அமெரிக்கா, பின்லாந்து நாடுகளில் பின்பற்றப்படும் முன்வார்ப்பு கான்கிரீட் கட்டுமான அமைப்பின்படி சென்னையில் வீடுகள் கட்டப்பட உள்ளன.
திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, இதற்கு முன் மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகள் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றும், தரமான வீடுகள் கட்டுவதில் கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார். தற்போது, சென்னை, இந்தூர் உட்பட 6 நகரங்களில் உலகத்தரம் வாய்ந்த பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வீடுகள் கட்டப்படுவதாகவும், இத்திட்டம் மத்திய, மாநில அரசுகளின் கூட்டுறவு கூட்டாட்சியை மேலும் வலுப்படுத்துவதகாவும் பெருமிதம் தெரிவித்தார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்கும் நிலையில், கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கும் கூடுதலாக 70 ஆயிரம் வழங்க உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தார். பெரும்பாக்கத்தில் ஆயிரத்து 152 வீடுகள் அடுத்த 15 மாதங்களுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
புதுமையான கட்டுமான தொழில்நுட்பங்களுக்கான சான்றிதழ் கல்வியையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இதன்மூலம், கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களில் மாணவர்கள் தங்கி சர்வதேச அளவிலான கட்டுமான பணிகளின் நுணுக்கங்களை அறிந்து கொள்ள முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.