இந்தியாவை புவியில் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உடைக்க பல முயற்சிகள் நடந்தன. ஆனால் எந்த சக்தியாலும் இந்தியாவை அழிக்க முடியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
குர்ஜார் இன மக்கள் வழிபடும் தேவ நாராயணனின் ஆயிரத்து 111-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் மாலசேரி டாங்கிரி கிராமத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள கோயிலில் வழிபாடு நடத்தினார்.
அதன்பின் பில்வாராவில் நடைபெற்ற தேவ நாராயணனின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், குஜ்ஜார் சமூக மக்கள் தாமரை மலருடன் இணைந்தவர்கள் என குறிப்பிட்டார் குர்ஜார் மக்கள் வழிபடும் தேவ நாராயணனின் தாமரை மலர் மீது தோன்றியதாக குறிப்பிட்ட மோடி, பாஜகவினர் பிறப்பிலிருந்தே தாமரையுடன் ஐக்கியமானவர்கள் என்று கூறினார்.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நமது நாகரிகம் மற்றும் கலாச்சாரம் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்வதாகக் கூறிய பிரதமர், உலகின் பல நாகரிகங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டதாகவும் கூறினார். இந்தியாவை புவியியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் உடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால், எந்த சக்தியாலும் இந்தியாவை அழிக்க முடியவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியா ஒரு நிலப்பகுதி மட்டுமல்ல என்றும் இது நமது நாகரிகம், கலாச்சாரம், நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். மேலும், பிரதமர் விவசாய காப்பீடு திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தானில் ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் 12 சதவிகிதம் வரை குஜ்ஜார் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாக்கு 40 முதல் 50 சட்டமன்ற தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள், போட்டி போட்டுக்கொண்டு அவர்களை கவர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
முன்னதாக தேவ நாராயணனின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் ராஜஸ்தான் சென்றுள்ள நிலையில், தனது பங்குக்கு அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் விடுமுறை அறிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Modi, PM Narendra Modi